அவரு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்ல..! தெரிந்த விஷயம் தான்.. சேவாக் அதிரடி
ரிஷப் பண்ட் இந்திய டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்டவர் ரிஷப் பண்ட். அதனால் தான் தோனி அணியில் இருந்தபோதே, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளிலும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பியதையடுத்து, அவரது விக்கெட் கீப்பிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. பேட்டிங்கிலும் தொடர்ச்சியாக சொதப்ப, 3 விதமான அணிகளிலும் அண்மைக்காலத்தில் ஆடும் லெவனில் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இந்நிலையில், நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் அவர் பேட்டிங்கில் சொதப்பிவரும் நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் எடுக்கப்படவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான விக்கெட் கீப்பராக ராகுல் எடுக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் 2வது விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் எடுக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் இந்திய அணியில் எடுக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், ரிஷப் பண்ட் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. கடைசி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட ரிஷப் பண்ட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ராகுல் தான் நிரந்தர விக்கெட் கீப்பர். ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்.
ரிஷப் பண்ட் அவரது ஆட்ட ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மெசேஜ் தான், இந்த புறக்கணிப்பின் மூலம் அவருக்கு கொடுக்கப்படுகிறது. அவரது விக்கெட்டை மோசமான முறையில் இழக்கிறார். கடைசி வரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க ரிஷப் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் அவருக்கு இனிமேல் வாய்ப்பு கிடைப்பது மிகக்கடினம்.
தோனி வருவதற்கு முன், எங்கள் காலத்தில் சரியான விக்கெட் கீப்பர் இல்லாததால், ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக பயன்படுத்தப்பட்டார். டிராவிட் விக்கெட் கீப்பிங் செய்ததால், கூடுதல் பேட்டிங் ஆப்சன் கிடைத்தது. ரிஷப் பண்ட் நல்ல கீப்பர் தான் என்றாலும், அவரது ஆட்டம், கோலி மற்றும் சாஸ்திரிக்கு திருப்தியளிக்கவில்லை. ரிஷப் பண்ட் தான் அவரது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். போட்டியை முடித்துக்கொடுக்க ரிஷப் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.