- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு சச்சின்-ஆண்டர்சன் பெயரிடும் விழா ஒத்திவைப்பு! பட்டோடி குடும்ப எதிர்ப்பு காரணமா?
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு சச்சின்-ஆண்டர்சன் பெயரிடும் விழா ஒத்திவைப்பு! பட்டோடி குடும்ப எதிர்ப்பு காரணமா?
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு சச்சின்-ஆண்டர்சன் பெயரிடும் நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் வீரர் பட்டோடி குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sachin-Anderson Naming Ceremony For India-England Series Postponed
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு அவர்கள் இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது.
சச்சின்-ஆண்டர்சன் டெஸ்ட் தொடர் என மாற்றம்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் டெஸ்ட் கிரிகெட்டில் மிகப்பெரும் சாதனையாளர்களாக வலம் வருகின்றனர். ஆகவே இருவரையும் கவுரவிக்கும் பொருட்டு இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற இருந்தது.
நிகழ்வு திடீரென ரத்து
இதற்காக சச்சின் மற்றும் ஆண்டர்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB)ஆகியவற்றின் அதிகாரிகள் இரு நாடுகளின் முக்கியமான முன்னாள் வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் இந்த நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஏர் இந்தியா விமான விபத்து தான் காரணம்
அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 275 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சச்சின், ஆண்டர்சன் தொடர் என பெயரிடும் விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் விழா எப்போது?
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கூட்டாக இந்த நிகழ்வை ஒத்திவைக்க முடிவு செய்தன. "இந்தியாவில் நடந்த துயர நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, மரியாதை நிமித்தமாக அறிவிப்பு சிறிது நேரம் காத்திருக்கலாம்" என்று ECB மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இரு வாரியங்களும் இப்போது விழாவிற்கான நெகிழ்வான காலக்கெடுவைப் பரிசீலித்து வருகின்றன. இந்த நிகழ்வுக்கு கோப்பை பெயரிடப்பட்ட ஜாம்பவான்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவருக்கும் அழைப்புகள் நீட்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பட்டோடி டிராபி
இதுஒருபுறம் இருக்க இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என பெயர் மாற்றுவதற்கு மறைந்த இந்திய முன்னாள் வீரர் பட்டோடி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்தியாவின் முதல் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் 2007 ஆம் ஆண்டு பட்டோடி டிராபி தொடங்கப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்காகவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவரது மகன், முன்னாள் இந்திய கேப்டன் மன்சூர் அலி கான் ஆகியோரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.
பட்டோடி குடும்பத்தினர் எதிர்ப்பு
மன்சூர் அலி கான் பட்டோடியின் மனைவியும், மூத்த பாலிவுட் நடிகையுமான ஷர்மிளா தாகூர், பெயர் மாற்றும் நடவடிக்கையை உணர்ச்சியற்றது என்று கூறினார். பட்டோடியின் குடும்பத்தினரிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை என்று அவர் கூறினார். "டைகரின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க பிசிசிஐ விரும்புகிறதா இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
சுனில் கவாஸ்கரும் விரக்தி
இதேபோல் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பெயர் மாற்றத்தை "உண்மையிலேயே தொந்தரவாக இருக்கிறது" என்று கூறினார். ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகையின் தனது பத்தியில், "தனிப்பட்ட வீரர்களின் ஓய்வு பெற்ற பெயரிடப்பட்ட கோப்பையைப் பற்றி ஒருவர் கேள்விப்படுவது இதுவே முதல் முறை, இருப்பினும் இந்த முடிவு முற்றிலும் ஐரோப்பிய கிரிக்கெட் வாரியத்தின் கையில் உள்ளது. மேலும் பிசிசிஐக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கலாம்" என்றார்.
பட்டோடி பெயர் தக்க வைக்கப்படுமா?
இதேபோல் சச்சினும், ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் பட்டோடி பெயரை மாற்ற வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. இவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பட்டோடி பெயரை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்து ஈசிபி இப்போது மறுபரிசீலனை செய்து வருகிறது. '
'இங்கிலாந்து-இந்தியா தொடரில் பட்டோடி இணைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உறுதிப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளது," என்று ஈசிபி அதிகாரி உறுதிப்படுத்தினார். மறைந்த இந்திய முன்னாள் வீரர் எம்ஏகே பட்டோடியின் பெயரிடப்பட்ட ஒரு பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு வென்ற கேப்டனுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது. ஆகவே இங்கிலாந்து தொடரில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இரு அணியிலும் தரமான வீரர்கள் இருப்பதால் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் இதோ:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.