#AUSvsIND டெஸ்ட் தொடரில் ரோஹித் ஆடவில்லை..? மாற்று வீரராக இளம் வீரருக்கு வாய்ப்பு.! ஹிட்மேனுக்கு நேர்ந்த சோகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. இந்திய வீரர்கள் சிட்னியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஐபிஎல்லின் போது தொடைப்பகுதியில் காயமடைந்த ரோஹித் சர்மா, முதலில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.
விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். எனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மட்டும் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார். ஆனாலும் காயத்திலிருந்து முழுமையாக மீளாத ரோஹித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
ஆனால் ரோஹித் சர்மா இன்னும் முழுமையான ஃபிட்னெஸை பெறவில்லை என்பதால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவது சந்தேகம் என்று மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடக்கவுள்ள நிலையில், 14 நாட்கள் குவாரண்டினில் இருக்க வேண்டும் என்பதால் முன்கூட்டியே ரோஹித் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்குள்ளாக அவர் முழு ஃபிட்னெஸை அடைவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.
எனவே ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. ரோஹித் சர்மா முழு ஃபிட்னெஸை அடைய முடியாத பட்சத்தில், அவருக்கு மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் எடுக்கப்படவுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 54 முதல் தர போட்டிகளில் ஆடி 4592 ரன்கள் அடித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 12 சதங்களும் 23 அரைசதங்களும் அடித்துள்ளார்.