RCBயிடம் டீல் பேசினேனா? சமூக வலைதளத்தில் கொந்தளித்த ரிஷப் பண்ட்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் ஆர்.சி.பி.க்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலுக்கு பண்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் தொடர் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐபிஎல் திருவிழா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அலாதி பிரியம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், விடுவிக்கப்பட உள்ள வீரர்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். மேலும் பிற அணிகளில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் பணியிலும் சில அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஆர்.சி.பி. அணியில் விளையாட உள்ளதாகவும், அணியின் கேப்டன் பொறுப்பு கேட்டு பண்ட் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் பண்ட்ன் கோரிக்கையை பெங்களூரு அணி நிர்வாகம் நிராகரித்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக ரிஷப் பண்ட் தனது எக்ஸ் தள பக்கத்தில் காட்டமான பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள பதிவில், “சமூக வலைதளங்களில் ஏன் பொய் செய்தியை பரப்புகிறீர்கள்? இது மிகவும் தவறான செயல். தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். ஒருபோதும் நம்பிக்கையற்ற சூழலை ஊருவாக்காதீர்கள். இதுபோன்ற தவறான செய்திகள் பரவுவது ஒன்றும் புதிது கிடையாது. மேலும் இது இத்துடன் நிற்கப்போவதும் கிடையாது. நாளுக்கு நாள் இது மோசமாகிக் கொண்டே தான் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.