- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA Test: இந்தியாவின் படுதோல்விக்கு இதுதான் காரணம்..! வெளிப்படையாக பேசிய ரிஷப் பண்ட்!
IND vs SA Test: இந்தியாவின் படுதோல்விக்கு இதுதான் காரணம்..! வெளிப்படையாக பேசிய ரிஷப் பண்ட்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கு கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியை அவர் பாராட்டியுள்ளார்.

இந்திய அணியின் படுதோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அத்துடன் டெஸ்ட் தொடரையும் தென்னாப்பிரிக்கா அணியிடம் 25 ஆண்டுகளுக்கு பிறகு இழந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் தோல்வியை இந்திய கேப்டன் ரிஷப் பண்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தென்னாப்பிரிக்க அணியின் ஆதிக்கத்தையும் அவர் பாராட்டினார்.
ரிஷப் பண்ட் விரக்தி
போட்டிக்கு பின்பு பேசிய ரிஷப் பண்ட், ''இந்த வெற்றி விரக்தி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று, ஒரு அணியாக நாங்கள் ஒன்றுபட வேண்டும். எதிரணியை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர். அதே நேரத்தில், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எங்கள் மனநிலையில் நாங்கள் தெளிவாக இருந்திருக்க வேண்டும்.
தோல்விக்கு இதுதான் காரணம்
எதிர்காலத்தில், இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம். அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். கிரிக்கெட்டில், ஒரு அணியாக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாங்கள் அதைச் செய்யத் தவறியதால், தொடர் முழுவதையும் இழந்தோம். இந்தத் தொடரிலிருந்து நாங்கள் எடுத்துச்செல்லும் நேர்மறையான விஷயம், எங்கள் சொந்த திட்டத்தில் கவனம் செலுத்துவதுதான்" என்று தெரிவித்துள்ளார்.
டெம்பா பவுமாவின் சாதனை
2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் தென்னாப்பிரிக்கா வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக ஹான்சி குரோன்யே தலைமையில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரை வென்றது. அந்தப் பட்டியலில் தற்போது டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
இந்த ஆட்டத்துக்கு பிறகு பேசிய பவுமா, ''இந்தியாவுக்கு வந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. ஒரு குழுவாக நாங்கள் சிறந்த நாட்களைக் கடந்து வந்துள்ளோம்.
இது எங்களுக்கு மற்றொரு நம்பமுடியாத சாதனை. இந்த தொடருக்கு நாங்கள் முன்பே திட்டமிட்டோம். அதற்கு ஏற்ப தயாரானோம். வீரர்கள் அணிக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதில் தெளிவாக இருந்தனர். ஒரு அணியாக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம்'' என்றார்.

