- Home
- Sports
- Sports Cricket
- RR அணிக்கு விருப்பப்பட்டு சென்றாரா ஜடேஜா?.. உண்மையை போட்டுடைத்த ராஜஸ்தான் உரிமையாளர்!
RR அணிக்கு விருப்பப்பட்டு சென்றாரா ஜடேஜா?.. உண்மையை போட்டுடைத்த ராஜஸ்தான் உரிமையாளர்!
ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேடு செய்யப்பட்டதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜடேஜா விருப்பப்பட்டு தான் அங்கு சென்றதாக ராஜஸ்தான் உரிமையாளர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் ஜடேஜா
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு துருப்பு சீட்டாக விளங்கிய ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே நிர்வாகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்துள்ளது. அவரையும், சாம் கரனையும் கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக முக்கியமான டிரேடுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கும் கலக்கும் ஜடேஜாவை சிஎஸ்கே விட்டுக் கொடுத்ததற்கு ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்
''பல ஆண்டுகளாக சிஎஸ்கே-வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது மிகவும் கடினமான முடிவு. சிஎஸ்கே எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று. அவரின் சம்மதத்துடனேயே இந்த டிரேடு செய்யப்பட்டது'' என்று சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் தெவித்து இருந்தார்.
ஆனாலும் ரசிகர்கள் ஜடேஜாவை விட்டுக் கொடுத்தது தவறு என்று கூறி வரும் நிலையில், ஜடேஜாவே தான் விருப்பப்பட்டு தான் ராஜஸ்தான் அணிக்கு வந்தார் என்று அந்த அணியின் உரிமையாளர் மனோஜ் படாலே தெரிவித்துள்ளார்.
விருப்பப்பட்டு சென்ற ஜடேஜா
''ஜட்டு (ஜடேஜா) சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு என்னைத் தொடர்பு கொண்டார். அக்டோபர் நடுப்பகுதியில் என்று நினைக்கிறேன், அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய, மேலும் உண்மையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் இந்தியா முழுவதும் அவர் அறியப்பட்ட அந்த இடத்திற்குத் தன்னுடைய வீட்டுக்கு (ராஜஸ்தான் ராயல்ஸ்) திரும்ப மிகவும் உற்சாகமாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்" என்று படாலே கூறியுள்ளார்.
ராஜஸ்தான் உரிமையாளர் பெருமிதம்
''கடந்த சில வாரங்களாக, நாங்கள் நிறைய தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். கடைசியாக நான் அவரைப் பார்த்தபோது, அவருக்கு 21 வயது. இப்போது வளர்ந்த ரவீந்திர ஜடேஜாவைத் தெரிந்துகொள்வது மிகவும் அருமையாக இருக்கிறது'' என்று படாலே தெரிவித்துள்ளார். இது ஜடேஜாவுக்கான பரிமாற்றம் மட்டுமல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய இருவருக்கான பரிமாற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.