இந்திய அணியின் சிம்மாசனத்திற்கு மகுடம் சூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் – சென்னையில் 2ஆவது சதம் விளாசி சாதனை!
Ravichandran Ashwin, IND vs BAN 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அரைசதம் அடித்துக் கொடுத்து இந்திய அணிக்கு மகுடம் சூடியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அடித்த 6ஆவது சதம் இதுவாகும், தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
Ravichandran Ashwin 2nd Hundred At Chepauk
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் அரைசதம் அடித்துக் கொடுத்து இந்திய அணிக்கு மகுடம் சூடியுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
Chennai Test, Chepauk Stadium, Ravindra Jadeja
முதலில் டாஸ் வென்ற வங்கதேசம், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வங்கதேசத்திற்கு எதிராக தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். அவர், 6, 6, 21 என்று ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய போட்டியிலும் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலமாக வங்கதேசத்திற்கு எதிராக மொத்தமாக 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
IND vs BAN Test
இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் எதிர்காலம் என்று சொல்லப்படும் சுப்மன் கில் 7 பந்துகள் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏன் திரும்ப வந்தார் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அவரது பேட்டிங் இருந்தது.
நம்பிக்கை நட்சத்திரமான கோலி 8 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய போதிலும் இக்கட்டான சூழலில் நின்று விளையாடாமல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்னை சேப்பாக்கத்தில் விராட் கோலி மோசமான சாதனையைத் தான் தக்க வைத்திருக்கிறார். இந்த மைதானத்தில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.
India vs Bangladesh 2024, Ravichandran Ashwin
அதன் பிறகு ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் இணைந்தார். கிட்டத்தட்ட 600 நாட்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பினார். நிதானமாக விளையாடிய பண்ட் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
ஜெய்ஸ்வால் 37 ரன்னுடனும், பண்ட் 33 ரன்னுடனும் விளையாடி வந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு வந்த பண்ட் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேஎல் ராகுல் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் அணியை சரிவிலிருந்து மீண்டு கொடுத்து அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர், 118 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 56 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். கேஎல் ராகுலும் கிட்டத்தட்ட 52 பந்துகள் நின்ற நிலையில் 16 ரன்கள் மட்டுமே எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார்.
Yashasvi Jaiswal, IND vs BAN Test
இதையடுத்து இந்திரன் சந்திரன் என்று அழைக்கப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போன்று விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்துக் கொடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருபடி மேல் சென்று சதம் விளாசி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அடித்த 6ஆவது சதம் இதுவாகும், தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று சொல்லப்படும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி கூட சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் ஆல்ரவுண்டராக வந்து இந்திய அணி சரிவிலிருந்து மீட்டு கொடுத்த தமிழக ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Ravichandran Ashwin, IND vs BAN 1st Test
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 102 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 117 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, இந்த மைதானத்தில் 2 சதங்கள் மற்றும் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய கபில் தேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்தார்.
கபில் தேவ் 2 சதங்கள் மற்றும் 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று அஸ்வின் 2 சதங்கள் மற்றும் 4 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.