ஒரே ஒரு விக்கெட்டுல ஒட்டுமொத்த சாதனையையும் காலி செய்து முதல் இந்திய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை!
IND vs BAN 2nd Test, Kanpur: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.
India vs Bangladesh 2nd Test, Kanpur
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறும் விதத்தை வைத்து பார்க்கும் போது இந்தப் போட்டி டிராவில் தான் முடியும் என்று தெரிகிறது. ஏற்கனவே கான்பூரில் போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்த நிலையில் போட்டியானது தாமதமாக தொடங்கப்பட்டது.
அதன் பிறகு மாலை போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிக்கப்பட்டது. கான்பூரில் நடைபெற்ற 23 போட்டிகளில் இந்தியா 7 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு 13 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக 41 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பிறகு இதுவரையில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.
Ravichandran Ashwin Records, IND vs BAN 2nd Test
தற்போது கான்பூரில் இந்தியா தனது 24 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் 41 ஆண்டுகால வரலாற்று சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும். ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவினால், இந்தியாவின் 41ஆவது ஆண்டுகால வெற்றிப் பயணத்திற்கு வங்கதேசம் முதல் முறையாக முற்றுப்புள்ளி வைக்கும்.
ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. காரணம், இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இதுவரையில் நேருக்கு நேர் மோதிய 14 டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கான்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
IND vs BAN 2nd Test, Kanpur
முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், தொடக்க வீரர் ஜாகீர் ஹசன் 0 ரன்னிலும், ஷத்மன் இஸ்லாம் 24 ரன்னிலும் ஆட்டமிழக்கவே, கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 31 ரன்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலமாக ஆசியாவில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார். ஆசியாவில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 420 விக்கெட்டுகள் கைப்பற்றி 2ஆவது இடம் பிடித்துள்ளார். இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 612 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளார்.
Ravichandran Ashwin 420 Wickets
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலின் தாக்கம் தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் தொடரையும் பாதித்துள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையே உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெறவுள்ள 2வது டெஸ்டுக்கு முன்னதாக திங்கள்கிழமை அகில பாரத இந்து மகாசபா ஆதரவாளர்கள் மைதானம் அருகே சாலை மறியல் செய்து ஹோமம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மைதானத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். போட்டியின் போது வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல், பயணிக்கும் பாதை மற்றும் மைதானம் அருகே ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Ravichandran Ashwin, IND vs BAN 2nd Test
நவம்பர் 6ம் தேதி டி20 போட்டியின் போது குவாலியர் முழுவதும் நிறுத்தம்!
குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நவம்பர் 6ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறவுள்ள டி20 போட்டியின் போது 'குவாலியர் முழுவதும் நிறுத்தம்' செய்ய இந்து மகாசபா அழைப்பு விடுத்துள்ளது. 'வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல' என்று அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். அதோடு, பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
அதே போன்று ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார். தற்போது அவர் ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். எஞ்சிய 4 நாட்களில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றினால் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.