IPL Two Super Overs: ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் நடந்த 2 சூப்பர் ஓவர் - எந்த போட்டி, யார் ஜெயிச்சது?
Two Super Overs in IPL History: ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு போட்டி இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்றது. 2020 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த இந்தப் போட்டியில் இறுதியில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
MI vs KXIP, 2 Super Overs
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஒரு சூப்பர் நடந்த பல போட்டிகள் உள்ளன. ஆனால், இதுவரையில் 17 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து 18 ஆவது சீசன் தொடங்க உள்ள நிலையில் ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. போட்டி டிராவில் முடிந்தால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும். அப்படி நடத்தப்படும் சூப்பர் ஓவரே டிராவில் முடிந்த நிலையில் 2ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு அணியின் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
MI vs KXIP, 2 Super Overs
அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த பதிவில் முழுமையாக நாம் பார்க்கப் போகிறோம். இதுவரையில் நடைபெற்ற 17 ஐபிஎல் சீசன்களில் கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த 1000க்கும் அதிகமான போட்டிகளில் 14 முறை தான் சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு முறை ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாக ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே வானவேடிக்கை தான். சிக்ஸரும், பவுண்டரியும் பறக்கும். ஸ்டேடியத்தில் அனல் பறக்கும், விசில் சத்தம் காதை கிளிக்கும். அந்தளவிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள். இதுவே சிஎஸ்கே விளையாடும் போட்டி என்றால் சொல்லவா வேணும், அதுவும் சேப்பாக்கத்தில் சொல்லவே வேணாம். ரசிகர்களின் கூட்டம் அலை மோதும் அளவிற்கு ஐபிஎல் போட்டி இருக்கும்.
MI vs KXIP, 2 Super Overs
அப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு முறை மட்டும் ஒரே போட்டிக்கு 2 சூப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான 36ஆவது போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவிக்க போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து முதல் சூப்பர் ஓவர் நடந்தது. இதில், கேஎல் ராகுல் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் சூப்பர் ஓவரை எதிர்கொண்டனர். ஜஸ்ப்ரித் பும்ரா சூப்பர் ஓவர் வீசினார். ஆனால், சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
MI vs KXIP, 2 Super Overs
இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் 6 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ரோகித் சர்மா மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் சூப்பர் ஓவரை எதிர்கொண்டனர். முகமது ஷமி சூப்பர் ஓவரை வீசினார். அந்த ஓவரில் மும்பை ஒரு விக்கெட்டை இழந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக சூப்பர் ஓவர் டையில் முடிந்தது.
பின்னர், 2ஆவது சூப்பர் ஓவர் நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் சார்பில் கெரான் போலார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் களமிறங்கி விளையாடினர். மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழந்து 11 ரன்கள் எடுத்தது.
MI vs KXIP, 2 Super Overs
தொடர்ந்து 12 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட பஞ்சாப் அணியில் மாயங்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயில் இருவரும் களமிறங்கி விளையாடினர். டிரெண்ட் போல்ட் சூப்பர் ஓவர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே கெயில் சிக்ஸர் அடித்தார். மாயங்க் அகர்வால் 2 பவுண்டரி அடிக்கவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2ஆவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
IND vs AFG 3rd T20I, 2 Super Overs
இதே போன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 3ஆவது டி20 போட்டியில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. இது இந்த ஆண்டு நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர், விளையாடிய ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக போட்டி டிராவில் முடியவே சூப்பர் ஓவர் நடைபெற்றது.
IND vs AFG 3rd T20I, 2 Super Overs
இதையடுத்து சூப்பர் ஓவரில் இரு அணிகளுமே 16 ரன்கள் எடுத்தன. இதையடுத்து 2ஆவது சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 11 ரன்கள் எடுத்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் 12 ரன்கள் எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.