IPL 2023: ஆர்சிபியை அலறவிட்டு நிகோலஸ் பூரன் ஐபிஎல்லில் படைத்த சாதனைகள்
ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் பல சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் டாப் 3 வீரர்களான விராட் கோலி(61), டுப்ளெசிஸ்(79), மேக்ஸ்வெல் (59) ஆகிய மூவரின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது.
213 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 23 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்துவிட்டது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 30 பந்தில் 61 ரன்களை குவித்தார். அதன்பின்னர் காட்டடி அடித்த நிகோலஸ் பூரன் 15 பந்தில் அரைசதம் அடித்து, 19 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவிக்க, கடைசி பந்தில் இலக்கை அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 15 பந்தில் அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன் சாதனை படைத்தார். ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை யூசுஃப் பதான் மற்றும் சுனில் நரைனுடன் பகிர்ந்துள்ளார். 14 பந்தில் அரைசதம் அடித்த ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.
ஐபிஎல்லில் அதிகமான ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் 326.32 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் பூரன் 4ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பாட் கம்மின்ஸ் (373.33) முதலிடத்திலும், ரெய்னா(348), யூசுஃப் பதான் (327.27) ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.