கார்னர் செய்யப்படும் ரோஹித்.. கோலி & பிசிசிஐயின் மட்டமான அரசியல்.. அம்பலப்படுத்திய மும்பை இந்தியன்ஸின் வீடியோ
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நவம்பர் 10ம் தேதியுடன் ஐபிஎல் முடியும் நிலையில், அதன்பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளும் கடந்த 26ம் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. 3 அணிகளிலுமே ரோஹித் சர்மாவின் பெயர் இல்லை.
நடப்பு ஐபிஎல்லில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் அடுத்த 2 போட்டிகளில் ஆடவில்லை. இந்நிலையில், அந்த காயத்தை சுட்டிக்காட்டி, அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டு, ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டார்.
அப்படி ரோஹித் சர்மாவின் உடற்தகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றால், அவர் உடற்தகுதி பெற்றுவிட்டால் அணியில் இணைவார் என்றுதார் அர்த்தம். அப்படி ரோஹித் அணியில் இணைய வாய்ப்பிருக்கிறது என்றால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனாக கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடையே பனிப்போர் நடந்துவருகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அதுதான் உண்மை. இந்த பனிப்போர் நீண்டகாலமாக நடந்துவருகிறது. அப்படியிருக்கையில், ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் புறக்கணிக்கப்பட்டிருப்பது, ரோஹித்தை கழட்டிவிட காத்திருந்தவர்களுக்கு, அவரது காயம் சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது என்றே எண்ண தோன்றுகிறது.
அவ்வளவு எளிதில் அரசியல் செய்து ஓரங்கட்டிவிடக்கூடிய அளவிற்கு பலவீனமான வீரர் அல்ல ரோஹித். ரோஹித் சர்மாவின் இடத்தை மற்றொருவர் நிரப்புவது என்பது மிகக்கடினமான விஷயம். அப்படியே ஒருவர் நிரப்பினாலும், ரோஹித் சர்மா அளவிற்கு அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடிவிடமுடியாது.
இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் விராட் கோலியின் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. கோலி நினைப்பதுதான் இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் எனுமளவிற்கு அவரது ஆதிக்கம் உள்ளது. பிசிசிஐக்குள் கூட அவரது குறுக்கீடுகள் இருக்கின்றன. எனவே ரோஹித்தை வேண்டுமென்றே கோலி ஓரங்கட்டியிருக்கிறார் என்ற கருத்து பரவலாக உள்ளது.
ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் காயம் காரணமாக இடம்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததையடுத்து, ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து, பெரிய ஷாட்டுகளை பறக்கவிடும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்திய அணியில் எடுக்கப்படவில்லை என்பது நொண்டிச்சாக்கு என்பதை பறைசாற்றும் விதமாக அந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் பதிவிட்டது. அதைக்கண்ட ரசிகர்கள், ரோஹித் சர்மா வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதியே செய்துவிட்டனர்.