#AUSvsIND டெஸ்ட் தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய ஷமி..! இந்திய அணிக்கு மரண அடி
ஆஸி.,க்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதற்கடுத்து நடக்கவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை. அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், இந்தியா திரும்புவதால், கடைசி 3 டெஸ்ட்டில் கோலி ஆடவில்லை.

கோலி ஆடாததே இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு என்ற நிலையில், பிரைம் ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமியும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 2வது இன்னிங்ஸில் ஷமி பேட்டிங் ஆடும்போது, கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் ஷமியின் வலது கையில் பலமாக அடிபட்டதையடுத்து, அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிச்சென்றார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வலது(பந்துவீசும் கை) கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால், அவரால் இந்த தொடரில் தொடர்ந்து விளையாட முடியாது. அதனால் டெஸ்ட் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
கோலி, ஷமி ஆகிய பேட்டிங் மற்றும் பவுலிங் ஜாம்பவான்கள் இருவரும் ஆடாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்; ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.