கோலியின் கேப்டன் பதவி காலி..? டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டன் ரஹானே..?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானேவையே தொடரவைக்கலாம் என்றும் கோலியை வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடவைப்பதன் மூலம் இந்திய அணி மேலும் அபாயகரமான அணியாக திகழும் என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார்.
கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகக்கவனமாக செயல்பட்டு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் ரஹானே, இந்த தொடரிலும் அதை செய்தார். அதுவும், ஷமி, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், அஷ்வின் என அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயத்தால் தொடர்ச்சியாக வெளியேறியபோதிலும், அனுபவமற்ற வீரர்களை வைத்துக்கொண்டு, அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, சிறப்பான களவியூகங்களை அமைத்து, ஆஸி., அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்டார் ரஹானே.
களவியூகம், ஃபீல்டிங் செட்டர்ப், வீரர்களை கையாண்ட விதம், காயத்தால் வெளியேறிய வீரர்களுக்கு மாற்று வீரர்களாக யார் யாரை இறக்கலாம் என்று எடுத்த முடிவு என அனைத்திலும் ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டதால்தான், இந்த வெற்றி சாத்தியமாயிற்று.
வெளிநாடுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ஆஸி.,யில் எதிர்கொண்ட அத்தனை சவால்களையும் தகர்த்து தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக தொடரலாம் என்ற கருத்துகள் வலுத்துள்ள நிலையில், அதை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வான், ரஹானேவையே இந்திய அணியின் கேப்டனாக தொடரலாம் என்பது என் கருத்து. கோலியை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவைத்து, ரஹானேவை கேப்டனாக்கினால், இந்திய அணி இன்னும் வலுவான, அபாயகரமான அணியாக உருவெடுக்கும். உத்தி ரீதியாக ரஹானே மிகச்சிறந்தவர் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.