IPL 2023: ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகளின் பட்டியல்..!
ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபி - சிஎஸ்கே இடையேயான போட்டி பெரிய ஸ்கோர் போட்டியாக அமைந்தது. சிஎஸ்கே அணி 20 ஓவரில் 226 ரன்கள் அடிக்க, 227 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 218 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், இந்த போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, டெவான் கான்வே (83) மற்றும் ஷிவம் துபே(52) ஆகியோரின் அதிரடி அரைசதங்கள் மற்றும் ரஹானேவின் அதிரடி பங்களிப்பால் 20 ஓவரில் 226 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணி.
227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் ஃபாஃப் டுப்ளெசிஸ்(33 பந்தில் 62 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல்(36 பந்தில் 76 ரன்கள்) ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 218 ரன்கள் வரை வந்த ஆர்சிபி அணி இலக்கை எட்ட முடியாமல் 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
சின்ன மைதானமான சின்னசாமி மைதானத்தில் பெரிய ஸ்கோர் போட்டியாக அமைந்த இந்த போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகளை பார்ப்போம்.
1. இந்த போட்டியில் மொத்தமாக 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன்மூலம் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் முதலிடத்தை மற்ற 2 போட்டிகளுடன் இந்த போட்டி பகிர்ந்துள்ளது. இதற்கு முன் ஆர்சிபி - சிஎஸ்கே(2018) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் - சிஎஸ்கே(2020) ஆகிய போட்டிகளிலும் தலா 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
2. ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே அணி அதன் அதிகபட்ச ஸ்கோரை(226 ரன்கள்) இந்த போட்டியில் அடித்தது. அதேபோல ஆர்சிபி அணி பதிலுக்கு அடித்த 218 ரன்கள் தான் சிஎஸ்கேவிற்கு எதிராக அந்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
3. சிஎஸ்கே அணி அடித்த 226 ரன்கள், ஐபிஎல்லில் அந்த அனியின் 3வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 2010ல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 246 ரன்களையும், 2008ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக 240 ரன்களையும் குவித்துள்ளது சிஎஸ்கே அணி.