#AUSvsIND கேப்டன் ரஹானே அபார சதம்; ஜடேஜா பொறுப்பான பேட்டிங்..! வலுவான நிலையில் இந்தியா
ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில்லும் புஜாராவும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா 17 ரன்களுக்கும், கில் 45 ரன்களுக்கும் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரின் 21 ரன்களிலும் ரிஷப் பண்ட் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 173 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
கோலி இல்லாததால் 4ம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் ரஹானே, மிகச்சிறப்பாக ஆடினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ரஹானே, சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜடேஜாவும் சிறப்பாக ஆடினார். ஜடேஜா 40 ரன்கள் அடித்து களத்தில் இருக்க, ரஹானே தனது 12வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். சதமடித்த ரஹானே 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருக்க, இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 82 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.