- Home
- Sports
- Sports Cricket
- Ind Vs Aus: கில்லுக்கு ஜாக்பாட்.. ஆஸி.க்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு
Ind Vs Aus: கில்லுக்கு ஜாக்பாட்.. ஆஸி.க்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. ODI அணிக்கு சுப்மன் கில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெருங்கும் உலகக்கோப்பை தொடர்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் ODI உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதனை மனதில் வைத்து ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றப்பட்ட கேப்டன்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹிட்மேன் ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ODI அணியில் அனுபவமிக்க வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களின் கலவை காணப்படுகிறது. கே.எல். ராகுல் பிரதான விக்கெட் கீப்பராக தொடர்கிறார், துருவ் ஜுரெல் மாற்று விக்கெட் கீப்பராக உள்ளார். பேட்டிங் வரிசையில், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, கில் ஆகியோருடன் இணைந்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கிறார்.
முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்துவீச்சு பொறுப்பை ஏற்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஹர்ஷித் ராணா உள்ளார். சுழற்பந்துவீச்சு துறையில், அனுபவமிக்க குல்தீப் யாதவ், ஆல்-ரவுண்டர்களான அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்துள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி அணிக்கு மற்றொரு ஆல்-ரவுண்ட் பரிமாணத்தை சேர்க்கிறார். கடைசியாக ODI போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ODI அணி
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியாவின் டி20 அணி
இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். BCCI அறிவித்துள்ள இந்திய அணி - சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் (து.கே), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (வி.கீ), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (வி.கீ), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.