பிட்ச்சை விமர்சிக்கும் முன்னாள் வீரர்களை பிரித்து மேய்ந்த ரோஹித் சர்மா
இந்திய ஆடுகளங்கள் பற்றி விமர்சிக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி ஜெயித்த நிலையில், 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கான தயாரிப்புகளுடன் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணி வந்திருந்தாலும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணி படுதோல்வியடைந்தது. அதனால் வழக்கம்போல இந்திய ஆடுகளங்கள் இந்திய அணியின் பலமான ஸ்பின்னிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.
ஆனால் அந்த தோல்விகளிலிருந்து பாடம் கற்ற ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சியில் 3வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் ஸ்பின்னை திறம்பட எதிர்கொள்ள தவறினர். அதேவேளையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் அசத்தினர். நேதன் லயன் அபாரமாக பந்துவீசி இந்திய அணியை சுருட்டி, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். எந்த ஆடுகளத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களான ஹைடன், மார்க் வாக் ஆகியோர் விமர்சித்தனரோ, அதை சிறப்பாக பயன்படுத்தித்தான் அந்த அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பிட்ச் மீதான விமர்சனங்கள் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் வீரர்கள் இதுமாதிரி பிட்ச்சில் ஆடியதில்லை. இதுமாதிரியான ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்சில் ஆடத்தான் விரும்புகிறோம். அதுதான் எங்கள் பலமும் கூட. சொந்த மண்ணில் ஆடும்போது நமது பலத்திற்கு ஆடவேண்டும் என்றுதான் நினைப்போம். எனவே வெளியே இருப்பவர்கள் பேசுவதை பற்றி கவலையில்லை.
பிட்ச்சை பற்றி ரொம்ப அதிகமாக பேசுகிறார்கள். இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் அனைவரின் கவனமும் பிட்ச் மீதுதான் இருக்கும். ஏன் நேதன் லயன் நன்றாக பந்துவீசுவது பற்றி கேட்க மறுக்கிறார்கள்? புஜாரா 2வது இன்னிங்ஸில் அருமையாக பேட்டிங் ஆடினார். உஸ்மான் கவாஜாவும் அருமையாக பேட்டிங் ஆடினார். இதுமாதிரி விவரங்கள் தான் நான் சொல்ல முடியுமே தவிர, பிட்ச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேச விரும்பவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.