தரவரிசையில் முதல் இடம்! ஐசிசியின் ஒருநாள் டீமில் ஒருவருக்கு கூட இடமில்லை - இந்தியாவுக்கு நேர்ந்த அவலம்
2024ம் ஆண்டுக்கான ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்துள்ள நிலையில், இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Virat Kohli
கடந்த 2024ம் ஆண்டிற்கான ஒருநாள் அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணிக்கு இலங்கையின் சரித் அசலங்கா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றதால், பெரும்பாலான அணிகள் மிகக் குறைந்த அளவிலேயே ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இந்திய அணியிலிருந்து ஒரு வீரர் கூட ஐசிசி ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
Rohit Sharma
அசலங்கா தலைமையில் இலங்கையில் இருந்து நான்கு வீரர்கள் ஐசிசி ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா மூன்று வீரர்களும், மேற்கிந்திய தீவுகளிலிருந்து ஒரு வீரரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானின் சயீம் அயூப் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் இலங்கையின் பதும் நிசங்கவும், நான்காவது இடத்தில் இலங்கையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸும் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்தாவது இடத்தில் கேப்டன் சரித் அசலங்கா இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளின் ஷெரஃபேன் ரதர்ஃபோர்ட் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் ஃபினிஷர்களாக களமிறங்குவர். இலங்கையின் வனிந்து ஹசரங்க, பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், ஆப்கானிஸ்தானின் ஃபசல்க் ஃபரூக்கி ஆகியோர் ஐசிசி ஒருநாள் அணியின் பந்துவீச்சாளர்கள்.
ஐசிசி தேர்வு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணி: சயீம் அயூப், ரஹ்மானுல்லா குர்பாஸ், பதும் நிசங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), ஷெரஃபேன் ரதர்ஃபோர்ட், அஸ்மத்துல்லா உமர்சாய், வனிந்து ஹசரங்க, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், ஃபசல்க் ஃபரூக்கி.
ஐசிசியின் ஒருநாள் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இதே போன்று வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி முறையே 2, 3, 4ம் இடங்களில் நீடிக்கின்றனர். தரவரிசையில் இந்திய அணி இவ்வளவு முன்னிலையில் இருந்த போதிலும் ஐசிசியின் 2024ம் ஆண்டிற்கான ஒருநாள் அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாதது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.