என் வாழ்நாளில் இப்படியொரு சம்பவத்தை பார்ப்பேன்னு நெனச்சுகூட பார்க்கல..! குண்டப்பா விஸ்வநாத் வேதனை
தன் வாழ்நாளில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில், ஆஸி.,க்கு எதிராக இந்திய அணி சுருண்டதை போல ஒரு இன்னிங்ஸை காண்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அடிலெய்டில் நடந்த அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அடித்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது. அந்த மோசமான பேட்டிங்கால் தான் இந்திய அணி படுதோல்வி அடைய நேர்ந்தது.
அந்த இன்னிங்ஸில் விராட் கோலி, புஜாரா, ரஹானே, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகிய அனைவருமே சொதப்பினர். இந்திய அணியில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கத்தைக்கூட எட்டாதது பெரும் வேதனையளிக்கும் விதமாக அமைந்தது.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அடித்த மிகக்குறைவான ஸ்கோர் இதுதான். இதற்கு முன் 1974ல் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடந்த டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் அடித்த 42 ரன்கள் தான் குறைவான ஸ்கோராக இருந்தது. அந்த மோசமான ரெக்கார்டை, கோலி தலைமையிலான இந்திய அணி தகர்த்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அப்போதைய இந்திய அணியில் ஆடிய முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த குண்டப்பா விஸ்வநாத், இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்கள் அடித்தபோது, நானும் இந்திய அணியில் ஆடினேன். அதை விட மோசமான ஸ்கோரை இந்திய அணி அடித்திருப்பது வேதனையளிக்கிறது. இந்திய அணி, 42க்கும் குறைவான ஸ்கோரை அடிப்பதை என் வாழ்நாளில் பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்தார்.