- Home
- Sports
- Sports Cricket
- முதல் டெஸ்ட்டில் திடீர் ட்விஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! கடைசி நாளில் இங்கிலாந்தை முடக்குமா இந்தியா?
முதல் டெஸ்ட்டில் திடீர் ட்விஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! கடைசி நாளில் இங்கிலாந்தை முடக்குமா இந்தியா?
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

India vs England 1st Test: England Set A Target Of 371 Runs
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் பொறுப்பான பேட்டிங்
4ம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் கேப்டன் சுப்மன் கில் வெறும் 8 ரன்களுக்கு கார்ஸ் பந்தில் போல்டானார். இதனால் இந்திய அணி 92/3 என தள்ளாடியபோது ரிஷப் பண்ட்டும், கே.எல்.ராகுலும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். விக்கெட் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ராகுல் வெளியே சென்ற பந்துகளை தொடவே இல்லை. ரிஷப் பண்ட்டும் தொடக்கதில் மிக பொறுமையாக ஆடினார்.
சிக்சர்களை பறக்க விட்ட பண்ட்
உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. உண்வு இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் அதிரடி பாணியை கையில் எடுத்தனர். சோயிப் பஷிரின் ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்த ரிஷப் பண்ட் பாஸ்ட் பவுலர்களின் ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். மறுபக்கம் கே.எல்.ராகுலும் கொஞ்சம் வேகம் காட்டினார். நாலாபுறமும் பந்துகளை ஓடவிட்ட இந்த ஜோடியை இங்கிலாந்து வீரர்களால் பிரிக்க முடியவில்லை.
கே.எல்.ராகுல் சதம்
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை விளாசினார். இதன்பிறகு ரிஷப் பண்ட் வெறும் 130 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்து இருந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து சோயிப் பஷிர் பந்தில் கேட்ச் ஆனார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 287/4 என்ற நிலையில் இருந்தது. மறுமுனையில் நன்றாக விளையாடிய கே.எல்.ராகுல் 137 ரன்னில் கார்ஸ் பந்தில் போல்டானார். இதுதான் ஆடட்த்தின் திருப்பு முனை விக்கெட்டாக அமைந்து விட்டது. அப்போது அணியின் ஸ்கோர் 333/5 என்ற நிலையில் இருந்தது.
ஒரே ஓவரில் 3 விக்கெட்
இதன்பிறகு தடுமாற்றத்துடன் ஆடிய கருண் நாயர் (20 ரன்) வோக்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு ஜோஷ் டாங்கே ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்து போட்டியை அப்படியே இங்கிலாந்து பக்கம் திருப்பினார். அதாவது இந்திய அணியின் ஸ்கோர் 349 ஆக இருந்தபோது ஜோஷ் டாங்கே வீசிய 90வது ஓவரின் முதல் பந்தில் ஷர்துல் தாக்கூர் (4 ரன்) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் சிராஜும் (0) வந்த வேகத்தில் வெளியேறினார்.
இந்திய அணி 364 ரன்களுக்கு ஆல் அவுட்
பின்பு அதே ஓவரின் 4வது பந்தில் ஜஸ்பிரித் பும்ராவும் (0) கிளீன் போல்டானார். பின்னர் பிரசித் கிருஷ்ணாவும் கடைசி விக்கெட்டாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 96 ஓவரில் 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 31 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ், ஜோஸ் டாங்கே தலா 3 விக்கெட்டுகளும், சோயிப் பஷிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு
இந்தியா 6 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி தனது 4வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் தேவை. கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன. கடைசி நாளில் 90 ஓவர்கள் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி சவாலான இலக்கை சேஸ் செய்யுமா? அல்லது இந்திய அணி இங்கிலாந்தை சுருட்டி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தை முடக்குமா?
இதேபோல் இந்த டெஸ்ட் டிராவில் முடியவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இங்கிலாந்து முதலில் ரன்களை சேஸ் செய்ய அதிரடியாக ஆட முயற்சிக்கும். அப்போது தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் வீழ்ந்தால் டிரா செய்ய முயலும். இந்திய அணியை பொறுத்தவரை முதல் ஒரு மணி நேரம் பவுலர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் சரியான லைன் அண்ட் லெந்த்தில் கட்டுக்கோப்புடன் பந்துவீசினால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அழுத்தத்தில் தள்ளி விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற முடியும்.
ஜஸ்பிரித் பும்ரா கையில் இந்திய அணியின் வெற்றி
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெறுவது வழக்கம்போல் ஜஸ்பிரித் பும்ரா கையில் தான் உள்ளது. பும்ரா பந்தை கவனமுடன் கையாண்டால் இங்கிலாந்து அணி வெற்றிக் கனியை பறிக்க வாய்ப்புள்ளது. அதே வேளையில் பும்ரா மட்டுமின்றி முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணாவும் தங்களின் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் வெற்றியை தடுப்பது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.