IND vs ENG: மான்செஸ்டர் டெஸ்டில் மோசமான சாதனை படைத்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 14-வது முறையாக டாஸ் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக முறை டாஸ் இழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா நீட்டித்துள்ளது.

தொடர்ச்சியாக 14-வது முறையாக டாஸ் தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய கிரிக்கெட் அணிக்கு டாஸ் அதிர்ஷ்டம் மீண்டும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக 14-வது முறையாக டாஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக முறை டாஸ் இழந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா மேலும் நீட்டித்துள்ளது.
சுப்மன் கில் 4வது முறை டாஸ் இழப்பு
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நான்காவது முறையாக டாஸ் இழந்தார். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று மேகமூட்டமான வானிலை காரணமாக முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
0.000061 சதவீதம்
இந்தியா கடைசியாக கடந்த ஜனவரி 2025-ல் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்றது. அதன்பிறகு, இரண்டு டி20 போட்டிகள், அதைத் தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் என அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா தொடர்ந்து டாஸ் தோற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 1999-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்த 12 தொடர் டாஸ் தோல்வி சாதனையை இந்தியா முறியடித்தது. இப்போது மான்செஸ்டரில் அது 14 ஆக உயர்ந்துள்ளது. இது 16,384-ல் ஒரு பங்கு அல்லது 0.000061 சதவீதம் மட்டுமே நிகழ வாய்ப்புள்ள ஒரு அரிதான நிகழ்வு என்று விஸ்டன் (Wisden) தெரிவித்துள்ளது.
அணியில் மாற்றம்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்த ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு பதிலாக அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அன்ஷுல் காம்போஜ் இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். முதல் மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். மறுபுறம், இங்கிலாந்து அணி ஷோயப் பஷீருக்கு பதிலாக லியாம் டாசனைக் களமிறக்கியுள்ளது.