ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஐபிஎல்லில் அசத்திய தமிழக வீரருக்கு இடம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது.
ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பார்ப்போம்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் ஆடவில்லை. ரோஹித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2வது விக்கெட் கீப்பிங் ஆப்சனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மயன்க் அகர்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் அசத்திவரும் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.
வருண் சக்கரவர்த்தி, இந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் ஸ்பெல் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து, கேகேஆர் அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் 20 ரன்களை விட்டுக்கொடுத்து ஐபிஎல்லில் தனது முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணியை பார்ப்போம்.
இந்திய டி20 அணி:
விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், மயன்க் அகர்வால், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி.