- Home
- Sports
- Sports Cricket
- பாக். அணியுடன் கைகுலுக்காத இந்திய வீரர்கள்! 'இந்த' முடிவுக்கு மூளையாக இருந்தது இவரா? வெளியான தகவல்!
பாக். அணியுடன் கைகுலுக்காத இந்திய வீரர்கள்! 'இந்த' முடிவுக்கு மூளையாக இருந்தது இவரா? வெளியான தகவல்!
Asia CUP Cricket: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வீரர்கள் எதிரணி வீரர்களுடன் கைகுலுக்குவதை முற்றிலுமாக தவிர்த்தனர். இந்திய அணியின் இந்த முடிவுக்கு பின்னால் யார் இருந்தது? என்பது குறித்து பார்க்கலாம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் போடும்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் கைகுலுக்குவதை தவிர்த்தார். இதேபோல் போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத இந்திய வீரர்கள்
இது தொடர்பாக போட்டிக்கு பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், இந்த முடிவு இந்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) இணைந்து எடுக்கப்பட்டது என்று கூறினார். ''இந்த முடிவு ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆதரவு தெரிவிக்கவும் இது எங்கள் வழியாகும். மேலும் நாங்கள் இங்கு ஆட்டத்தை விளையாட வந்தோம். இதற்கு உரிய பதிலை அளித்தோம்" என்று சூர்யகுமார் விளக்கம் அளித்தார்.
இந்திய அணி முடிவுக்கு பின்னால் யார்?
பாகிஸ்தான் அணியுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த முடிவுக்கு பின்னால் பிசிசிஐ மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் மேற்கோளிட்ட பல ஊடக அறிக்கைகளின்படி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதையோ அல்லது வார்த்தை பரிமாற்றங்களையோ தவிர்க்குமாறு இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கவுதம் கம்பீர், பிசிசிஐ மூத்த அதிகாரிகள்
பிடிஐ அறிக்கையின்படி, கம்பீர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்றும், பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை இறுதி செய்ததாகவும், மூத்த வீரர்கள் இதை ஆதரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சூர்யகுமார் யாதவ்வின் சூப்பரான விளக்கம்
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்த சூர்யகுமார் யாதவ்விடம், பாகிஸ்தானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தது அரசியல் உள்நோக்கம் கொண்டதா? என பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூர்யகுமார், ''வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டு மனப்பான்மையை விட முக்கியமானவை. நாங்கள் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறோம். இந்த வெற்றியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்கிறோம்'' என்றார்.