லட்சுமண் உன் இஷ்டத்துக்கு குளிக்க போயிடுவியா..? டென்ஷன் ஆன கங்குலி பரபரப்பு சம்பவத்தை விவரித்த ஆகாஷ் சோப்ரா.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே 2007 ஆம் ஆண்டு ஒரு தொடர் நடைபெற்றது. இந்த போட்டியின் போது ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானது அப்போது விவிஎஸ் லட்சுமணன் ஒரு காரியத்தை செய்தார். அந்தக் காரியம் எப்படி தீர்க்கப்பட்டது எனவும் சௌரவ் கங்குலி என்ன செய்தார் எனவும் அப்போது அணியில் இருந்த தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கேப் டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் வாசிம் ஜாபர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். அந்த நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் மூன்றாவதாக இறங்க வேண்டும். ஆனால், அவரால் முதல் நாள் இந்த போட்டியில் ஆட முடியவில்லை. அதன் பின்னர் சற்று தள்ளித்தான் ஆட வேண்டும் என்பது விதிமுறை. எனவே அடுத்த வீரர் லட்சுமணன் இறங்க வேண்டும் .
ஆனால் அந்த நேரத்தில் லக்ஷ்மணன் குளித்துக் கொண்டிருந்தார் போலிருக்கிறது. எப்பொழுதும் பேட்டிங் இறங்கும் முன் குளிக்கும் பழக்கத்தை லட்சுமண் வைத்திருந்தார். போட்டி அன்று திடீரென்று இரண்டு விக்கெட்டுகள் விழுந்து சச்சின் டெண்டுல்கரும் ஆட முடியாமல் போய்,அவர் ஆட வேண்டிய சூழ்நிலை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அப்போதைய இக்கட்டான சூழ்நிலை உருவானது. உடனடியாக சமயோஜிதமாக சிந்தித்த சவுரவ் கங்குலி திடீரென ஒரு முடிவெடுத்தார். கங்குலிக்கு ஒருவர் டீஷர்ட் மாட்டிவிட ஒருவர் கால் பேடை கட்ட அவர் விரைவாக தயாராகி களமிறங்கினார். இப்படியாக விரைவில் பேட்டை தூக்கிக் கொண்டு ஆடு களத்தில் இறங்கிவிட்டார் சவுரவ் கங்குலி.
அப்போதுதான் லட்சுமணன் சிரித்துக்கொண்டே குளியலறையிலிருந்து வெளியே வருகிறார். இப்படி எல்லாம் செய்தால் கங்குலிக்கு பிடிக்காது இருந்தாலும் சமயோசிதமாக யோசித்து அந்த போட்டியில் களமிறங்கிய கங்குலி 46 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் லட்சுமண் அணியின் மூத்த வீரர் என்பதால் கங்குலியால் அவரை திட்டமுடியவில்லை இருப்பினும் கங்குலி அவரை எச்சரித்திருப்பார் என்று அந்த நிகழ்வினை தற்போது தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.