எப்போதுமே கோலி தான் எங்க கேப்டன்.. நான் சைடுதான்..! தன்னடக்கத்துடன் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹானே
இந்திய டெஸ்ட் அணிக்கு எப்போதுமே விராட் கோலி தான் கேப்டன், தான் அவருக்கு துணை தான் என்றும் அஜிங்க்யா ரஹானே கூறியுள்ளார்.
ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இந்தியா திரும்பிவிட்டார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தினார்.
கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்த கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே மிகக்கவனமாக செயல்பட்டு சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் ரஹானே, இந்த தொடரிலும் அதை செய்தார். அதுவும், ஷமி, பும்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், அஷ்வின் என அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் காயத்தால் தொடர்ச்சியாக வெளியேறியபோதிலும், அனுபவமற்ற வீரர்களை வைத்துக்கொண்டு, அவர்களை சரியான முறையில் வழிநடத்தி, சிறப்பான களவியூகங்களை அமைத்து, ஆஸி., அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வெற்றி கண்டார் ரஹானே.
களவியூகம், ஃபீல்டிங் செட்டர்ப், வீரர்களை கையாண்ட விதம், காயத்தால் வெளியேறிய வீரர்களுக்கு மாற்று வீரர்களாக யார் யாரை இறக்கலாம் என்று எடுத்த முடிவு என அனைத்திலும் ஒரு கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டதால்தான், இந்த வெற்றி சாத்தியமாயிற்று. மேலும் களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, ஆஸி.,யின் அனைத்து வியூகங்களையும், ஸ்லெட்ஜிங்கையும் தூண்டுதல்களையும் சிறப்பான முறையில் சாமர்த்தியமாக எதிர்கொண்டு சாதித்தார் ரஹானே.
வெளிநாடுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ஆஸி.,யில் எதிர்கொண்ட அத்தனை சவால்களையும் தகர்த்து தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்க தொடங்கியுள்ள நிலையில், இதுகுறித்து ரஹானேவே பேசியுள்ளார்.
இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசிய ரஹானே, ”எதுவுமே மாறவில்லை. விராட் கோலி தான் எப்போதுமே டெஸ்ட் அணியின் கேப்டன். நான் அவரது துணை தான். அவர் இல்லாத சமயங்களில் இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்தி வெற்றிகளை பெற்று கொடுப்பது எனது கடமை” என்று ரஹானே வழக்கம்போலவே தன்னடக்கத்துடன் கூறியுள்ளார்.