#INDvsENG உங்க திட்டத்தையே புரிஞ்சுக்க முடியலயேப்பா..! கோலியை விளாசிய ஜடேஜா
இந்திய அணியின் பரிசோதனை என்ன மாதிரியானது என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. நல்ல ஃபார்மில் இருக்கும் ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அணியின் சிறந்த ஆடும் லெவனுடன் களமிறங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன.
இந்நிலையில், முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, போட்டியின் முடிவு ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் என்ன புதிய பரிசோதனையை இந்திய அணியில் பார்த்தீர்கள்? தவான் எப்படி ஆடுவார் என்று நமக்கும் தெரியும். கேஎல் ராகுல் ஓபனிங்கில் தான் ஆடுகிறார். சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருந்தார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடினார். அந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. என்ன மாதிரியான பரிசோதனை என்று எனக்கு தெரியவில்லை.
போட்டிக்கு முன்பாக பேசிய விராட் கோலி, ரோஹித் சர்மா தான் தொடக்க வீரராக இறங்குவார்; அதிரடியாக ஆடவுள்ளார் என்று கோலி தெரிவித்தார். ரோஹித் ஆடாமல் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றதையடுத்து, அவர் தான் தொடக்க வீரராக இறங்கப்போகிறார் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. ஹர்திக் பாண்டியாவும் அப்படித்தான். ஆக்ரோஷமாக அடித்து ஆடப்போகிறீர்கள் என்றால், அணி வீரர்களை அதற்கேற்றவாறு பயன்படுத்த வேண்டும். சேவாக்கிடம் போய் தடுப்பாட்டம் ஆடு என்றோ, புஜாராவிடம் சென்று அடித்து ஆடு என்றோ சொல்லமுடியாது என்று அஜய் ஜடேஜா விளாசினார்.