பவுலர்களாக கெரியரை தொடங்கி மிரட்டலான பேட்ஸ்மேன்களாக மாறிய 5 வீரர்கள்..!
ஒரு பவுலராக தங்களது கிரிக்கெட் கெரியரை இளம் வயதில் தொடங்கி, பிற்காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக உருவெடுத்து, பேட்டிங்கை தங்களது அடையாளமாக மாற்றிய 5 வீரர்களை பார்ப்போம்.
1. ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாகவும், சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் திகழும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு நிகரான தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியைவிட சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் ஸ்மித், தனது கெரியரை லெக் ஸ்பின்னராகத்தான் தொடங்கினார். 2010 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் லெக் ஸ்பின்னராகத்தான் ஸ்மித் எடுக்கப்பட்டார். பின்னர் அவரது மிகச்சிறந்த பேட்டிங்கால், எதிரணிகளை அடித்து துவம்சம் செய்ததால், பேட்ஸ்மேனாக மாறியதுடன், தலைசிறந்த பேட்ஸ்மேனாக வளர்ந்து ஸ்மித் பூதாகரமாக நிற்கிறார் இன்று.. ஸ்மித் பேட்ஸ்மேனாக உருவெடுத்த பின்னர், பந்துவீச்சில் கவனமும் செலுத்தவில்லை. 237 சர்வதேச போட்டிகளில் ஆடி 12070 ரன்களை குவித்துள்ள ஸ்மித், 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2. கேமரூன் ஒயிட்(ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலிய அணியில் 2005ம் ஆண்டு அறிமுகமான கேமரூன் ஒயிட். இவரும் வலது கை லெக் ஸ்பின்னராகத்தான் கெரியரை தொடங்கினார். பின்னர் நன்றாக பேட்டிங் ஆடி பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். அதன்பின்னர் பெரியளவில் பந்துவீசவில்லை. ஆஸ்திரேலிய அணிக்காக 142 சர்வதேச போட்டிகளில் ஆடி 3202 ரன்களை அடித்துள்ள ஒயிட், 18 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
3. ரவி சாஸ்திரி(இந்தியா)
ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, தனது கெரியரை இடது கை ஸ்பின்னராகத்தான் தொடங்கினார். பேட்டிங்கும் சிறப்பாக ஆட, காலப்போக்கில் மிரட்டலான பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இந்திய அணிக்காக 230 போட்டிகளில் ஆடி 6938 ரன்களை விளாசியுள்ளார்; 280 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவி சாஸ்திரி பேட்டிங்கும் நன்றாக ஆட தொடங்கிய பின்னர் முழு ஆல்ரவுண்டராக திகழ்ந்தார்.
4. ஷோயப் மாலிக்(பாகிஸ்தான்)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயப் மாலிக், 1999ம் ஆண்டிலிருந்து இன்னும் பாகிஸ்தான் அணியில் ஆடிவருகிறார். வலது கை ஆஃப் ஸ்பின்னராக கெரியரை தொடங்கிய ஷோயப் மாலிக், பின்னர் தனது பொறுப்பான மற்று முதிர்ச்சியான பேட்டிங்கால் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். பின் வரிசையிலும் பின்னர் மிடில் ஆர்டரிலும் சிறப்பாக பேட்டிங் ஆடி, அணியை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றி பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார் மாலிக். மாலிக் 435 சர்வதேச போட்டிகளில் ஆடி 11753 ரன்களை குவித்து, 218 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
5. சனத் ஜெயசூரியா(இலங்கை)
சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜெயசூரியா, ஆரம்பத்தில் இடது கை ஸ்பின்னராகத்தான் கெரியரை தொடங்கினார். பின்னர் தனது அபாரமான பேட்டிங் திறமையால் பேட்ஸ்மேனாக உருவெடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரராக பல்லாண்டுகள் ஆடி அசத்தியவர். இலங்கை அணியின் கேப்டனாக இருந்து அணியையும் வழிநடத்தியுள்ளார். 445 ஒருநாள் மற்றும் 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 421 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
5 cricketers