- Home
- Spiritual
- Krishna Jayanthi : வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம்..பின்னணியில் இருக்கும் ஆன்மிக ரகசியம் என்ன?
Krishna Jayanthi : வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம்..பின்னணியில் இருக்கும் ஆன்மிக ரகசியம் என்ன?
Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம் வரைவது ஏன்? கண்ணனுக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி
கண்ணன் அவதரித்த திருநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் புனித நாளே கிருஷ்ண ஜெயந்தி (ஜன்மாஷ்டமி). இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி வருகிற 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்துடன் தொடர்புடைய நாளில் கிருஷ்ண ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.
வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம் வரைவது ஏன்?
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தை கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை வரைவது பல குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும் அழகான பாரம்பரியமாகும். குழந்தை கிருஷ்ணர் தங்கள் வீட்டிற்குள் வந்து அருள்புரிவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவரை வரவேற்கும் விதமாக இந்தப் பாதச்சுவடுகள் வரையப்படுகின்றன.
பொதுவாக அரிசி மாவைக் கொண்டு இந்தப் பாதச்சுவடுகள் வரையப்படுகின்றன. குழந்தை கிருஷ்ணரை அன்புடன் வீட்டிற்குள் வரவேற்பதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து, அவரது அருள் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாக உள்ளது.
ஏன் குழந்தை பாதம்
வெண்ணெய் திருடி, ஓடி ஆடி விளையாடிய பாலகிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை நினைவுகூரும் வகையில், அவரது சிறிய பாதங்களைப் போன்று வீட்டில் பாதச்சுவடுகள் வரையப்படுகின்றன.
கண்ணனுக்கு பிடித்த உணவுகள் என்ன?
- சிறுவயது முதல் கண்ணனுக்கு மிகவும் பிடித்தது வெண்ணெய். கோகுலத்தில் கண்ணன் வெண்ணெயைத் திருடி சாப்பிட்டதாகக் கூறப்படும் பல்வேறு புராணக் கதைகள் இன்றளவும் பக்தர்களால் விரும்பிப் பேசப்படுகின்றன.
- கண்ணனின் குழந்தைப் பருவ நண்பரான குசேலர், அவரைச் சந்திக்கச் சென்றபோது அன்புடன் கொண்டு சென்ற அவலை கண்ணன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக புராணக் கதை கூறுகிறது. இதனால், கண்ணனுக்கு அவல் மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகக் கருதப்படுகிறது.
- ஆயர்பாடி வாழ்க்கையுடன் தொடர்புடைய கிருஷ்ணருக்கு, தயிர், மோர், நெய் மற்றும் பால்கோவா போன்ற பால் சார்ந்த உணவுகள் அனைத்தும் மிகவும் உகந்தவை.
- தமிழக வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே உப்பு சீடை, வெல்ல சீடை, முறுக்கு, அப்பம், வெண்ணெய், கல்கண்டு உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களைத் தயாரித்து, கண்ணனுக்கு நைவேத்தியமாகப் படைப்பது வழக்கம்.
குழந்தைகளை கிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிப்பது ஏன்?
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குழந்தைகளை பாலகிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிப்பது, காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அழகான பக்தி மற்றும் பண்பாட்டு பாரம்பரியமாகும். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அல்லது ராதை வேடம் அணிவித்து, தலையில் மயிலிறகு, கையில் புல்லாங்குழல், கழுத்தில் மாலை என அலங்கரித்து, பாலகிருஷ்ணரைப் போல் அழகுபடுத்தி மகிழ்வார்கள்.
குழந்தைகளை கிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிப்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. குழந்தைகளுக்கு ஆன்மிக மற்றும் பண்பாட்டு விஷயங்களை அறிமுகப்படுத்துவது, குடும்பத்துடன் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது என பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது.

