Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
வராஹி தேவி, பூமி தொடர்பான நிலம், வீடு, மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த தெய்வம். செவ்வாய்க்கிழமைகளில் இவரை மனமார வழிபட்டால், தடைபட்ட நில காரியங்கள் நிறைவேறி, சொத்து வளர்ச்சி மற்றும் மன அமைதி கிட்டும்.

கேட்ட வரம் தரும் வராஹி அம்மா
நிலம், வீடு, மனை மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்ற பிரச்சினைகள் மனித வாழ்க்கையில் மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கியமானவை. இத்தகைய நிலப் பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை பெறச் செய்யும் சக்தி வாய்ந்த தெய்வம் வராஹி தேவி ஆவார். இந்த அம்மன், லலிதா பரமேஸ்வரியின் ஐந்தாவது சக்தியாக உருவாகி, பஞ்சமி சக்தியாக விளங்குபவள். பூமியின் ஆழத்திலிருந்து எழுந்து, பூமியை உயர்த்திய வராக அவதாரத்தின் தெய்வீக வடிவமாக இவரை கருதுகிறார்கள்.
பூமி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தெய்வம்
வராஹி தேவி எப்போதும் பூமி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் தெய்வம் என பண்டிதர்கள் கூறுகின்றனர். நிலம், வீடு, சொத்து, மனை பிரச்னைகள், நீதிமன்ற வழக்குகள் போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமையில் வராஹி அம்மனை வழிபடுவது மிகுந்த பலனை அளிக்கும். இந்த நாளில் வழிபாடு செய்தால், தடைபட்ட நில காரியங்கள் விரைவில் நிறைவேறும், நிலம் தொடர்பான தகராறுகள் தீர்ந்து, சொத்து வளர்ச்சி ஏற்படும்.
கிழமை முக்கியம் மக்களே
செவ்வாய்க்கிழமையன்று காலை எழுந்து குளித்து, வீட்டின் வடகிழக்கு மூலையில் சுத்தமாக ஒரு மண்டலம் போட்டு, வராஹி அம்மனின் படம் அல்லது சிலையை வைத்து வழிபடலாம். சிவப்பு நிற ஆடை அணிந்து, சிவப்பு மலர் அர்ப்பணித்து, தீபம் ஏற்றி “ஓம் வாராஹ்யை நம:” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். வழிபாட்டின்போது மனதில் வராஹி அம்மன் சிவப்பு ஆடை அணிந்து சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் தெய்வீக வடிவத்தை தியானிக்கலாம்.
இவ்வாறு தியானித்து வழிபடும் போது, நிலம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாது, எதிரிகளின் தடைகள், வீட்டுத் தகராறுகள், சட்ட வழக்குகள் என அனைத்தும் தீர்ந்து, நிதி வளர்ச்சி, மன அமைதி, குடும்ப நிம்மதி ஆகியவை கிட்டும். பூமி அம்சத்தை பிரதிபலிக்கும் வராஹி தேவியை வழிபடுவதால், நிலத்துடன் தொடர்புடைய அனைத்து காரியங்களும் சுமுகமாக நடைபெறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பிரச்சினைகள் காணாமல் போகும்
தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயிலில், திருவானைக்காவில், காசியில் உள்ள வராஹி பீடங்களில் வழிபாடு செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். குறிப்பாக காசி வராஹி சன்னிதியில் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை நடைபெறும் ஆராதனையை தரிசிப்பது மிகுந்த பாவநிவர்த்தியாகும் என்று ஐதீகம் கூறுகிறது.
எனவே, நிலம், வீடு அல்லது மனை பிரச்சினைகளால் மனம் கலங்கியவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று வராஹி அம்மனை மனமார வழிபடுங்கள். அன்னையின் அருள் கிடைத்தவுடன் தடைகள் அனைத்தும் நீங்கி, நீண்ட நாட்களாக காத்திருந்த நிலம் சம்பந்தமான காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். செவ்வாய்க்கிழமை வராஹி வழிபாடு செய்தால் நிலம் உங்கள் வசம் நிச்சயம் வரும்!