வீரமாகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் போட்டோஸ்.. இந்த கோயிலின் சிறப்புகள் இவ்வளவு இருக்கா..!
அம்மாபேட்டை மாரவாடி தெருவில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை மாறாவடி தெருவில் அமைந்துள்ளது வீரமாகாளியம்மன் கோயில். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அம்மன் மண்ணால் ஆன சுயம்புவாக தோன்றியுள்ளார். இதை கண்ட பக்தர்கள் கீற்றுக்கொட்டகையில் கோயில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். அம்மாபேட்டை அருகே செல்லும் வெண்ணாற்றில் நாகத்தி மரத்தினால் வடிவமைக்கப்பட்ட மகாகாளியம்மன் உருவ சிலை மிதந்து வந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தில் இருந்து அம்மன் சிலையை மீட்டெடுத்து கொட்டகையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் அத்தி மரத்தினால் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்து வழிபட்டு வந்தனர்.
இக்கோயில் பெட்டி காளியம்மனை வருடத்திற்கு ஐந்து நாள் மட்டுமே பக்தர்கள் தரிசிக்க இயலும். திருமண தடைகள், குழந்தை வரம் என பக்தர்கள் வேண்டும் அனைத்தையும் அள்ளித்தரும் இந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்களால் தீர்மானிக்கப்பட்டது. இக்கோயிலில் எங்கும் இல்லாத வகையில் சௌபாக்கிய யோக வராஹி அம்மனுக்கு தனி கோயில் கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிர்ஷ்ட குபேரன், திருவள்ளுவர், அகத்தியர், முக்கியமாக கிருபானந்த வாரியாருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தேர் வடிவில் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி அம்பாள் பேழையிலிருந்து எடுத்து வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
மறுநாள் சிறப்பு அபிஷேக ஆராதனை, அம்பாள் யதாஸ்தானம் வந்து அருளுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த நாலாம் தேதி யாகசாலை நிர்மாணிக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை 6ம் கால மகா பூர்ணாஹூதி, கஜ பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.
தொடர்ந்து வீரமாகாளியம்மன் கோயில், சௌபாக்கிய யோக வராஹி அம்மன் கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பரா சக்தி என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.