Purattasi: நாளை புரட்டாசி முதல் நாள்.. வீட்டில் இந்த விஷயங்களை மறக்காமல் செய்யுங்க!
purattasi: புரட்டாசி மாதம் நாளை தொடங்கவுள்ள நிலையில் அதிகாலையில் என்ன செய்ய வேண்டும்? பெருமாளுக்கு பிடித்த பொருள்கள் என்னென்ன? நைவேத்தியமாக என்ன படைக்கலாம்? என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.

புரட்டாசி முதல் நாள்
இந்து சமயத்தில், குறிப்பாக வைணவ மரபில், புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. “கோவிந்தா..கோவிந்தா” என்ற திருநாமம் ஒலிக்க, இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் விரதம் இருந்து, விளக்கேற்றி, துளசி வைத்து பெருமாளை வழிபடுவது வழக்கம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி ஒன்று நாளை செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது.
புரட்டாசி முதல் நாளில் என்ன செய்யலாம்?
புரட்டாசி முதல் நாளன்று அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலம் போடவும். பூஜை அறையில் பெருமாள் அல்லது வெங்கடேசப் பெருமான் படத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, துளசி இலைகளை அர்ப்பணித்து பெருமாளை வழிபடலாம்.
பெருமாளுக்கு பிடித்த பொருள்கள்.
- பெருமாள் வழிபாட்டில் துளசிக்கு தனிச்சிறப்பு இருப்பதால், தூய்மையான துளசி இலைகளை பெருமாளுக்கு அர்ப்பணிப்பது வழக்கம்.
- நைவேத்தியமாக வெண்ணெய், பால் அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைப் படைக்கலாம்.
- அரிசி, பால், வெல்லம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்க்கரைப் பொங்கலையும் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.
- இதனுடன் அவல், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட சுத்தமான பழங்களையும் இறைவனுக்கு படைத்து, மனமுருகி வழிபடலாம்.
மறக்காமல் செய்ய வேண்டியது
பூஜையின்போது “ஓம் நமோ நாராயணாய”, “கோவிந்தா, கோவிந்தா” போன்ற பெருமாளின் திருநாமங்களை உச்சரித்து வழிபடலாம். மேலும், விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது தங்களுக்கு தெரிந்த பெருமாள் ஸ்லோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்யலாம். நேரம் இருப்பவர்கள் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளை தரிசனம் செய்து வழிபடுவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு
விரதம் இருப்பவர்கள் தங்கள் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப உணவு முறையைத் தேர்வு செய்யலாம். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்வார்கள். சிலர் பழம், பால் போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பார்கள். உடல்நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருப்பதே முக்கியம்.

