Tirupati Temple: டோட்டலாக மாறும் திருப்பதி கோவில்! தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தை குறைக்கவும், இந்துக்கள் அல்லாதோர் பணியாற்ற தடை விதிக்கவும் புதிய அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு முடிவு செய்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர அரசுக்கு முக்கிய நிதியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வரே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து பல்வேறு அதிரடி முடிவுகளை பி.ஆர்.நாயுடு எடுத்து வந்தார். சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் திருமலையில் நடைபெற்றது. புதிய அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.நாயுடு: ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதை தவிர்த்து 2 அல்லது 3 நேரத்திற்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அலிபிரியில் சுற்றுலா கழகம் மூலம் 20 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் மும்தாஜ் ஓட்டல் நிறுவனத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டல் சட்டவிதிகளை மீறியதால் அனுமதியை ரத்து செய்துள்ளது.
குறிப்பாக இந்து கோவிலில் இந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. இந்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் கோவில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர். ஒன்று அவர்களாகவே, விஆர்எஸ், எனப்படும் விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம் அல்லது வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் கோரலாம். திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.