மாசி மகத்தன்று கும்பகோணம் 'மகாமகம்' குளத்தில் நீராடினால்... உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?
Masi Magam 2023: கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம்.
புராணங்களில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் நீராடி செல்ல தேவாதி தேவர்களும் பூலோகம் வருவதாக கூறுவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் விழா கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கானோர் கும்பகோணத்தின் நடுவே இருக்கும் பகுதியான மகா மகம் குளத்தில் புனித நீராட செல்வார்கள்.
மாசி மாதத்தில் புனித நீராடல் என்று சொன்னாலே, எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கும்பகோணம் மகாமகம் குளம் தான். இந்த மகாமகம் உருவான கதையும், மாசி மகம் புனித நீராடலுக்கும் கூட புராணங்களில் தனிக்கதை உண்டு.
புராண கதை
பாவங்கள் கரைய அனைவரும் புனித நதிகளில் நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, சிந்து, கோதாவரி, தாமிரபரணி போன்றவைகளில் கூட பாவங்கள் அதிகமாக சேர்ந்தன. மனிதர்களின் பாவங்களை போக்கும் நதிகளின் பாவங்கள் தீர உபகாரம் செய்ய வேண்டும் என சிவ பெருமானிடம் நதிகள் வேண்டினவாம். அப்போது மனமுருகிய சிவ பெருமான், கும்பகோணத்தில் இருக்கும் தீர்த்தத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும் மக நட்சத்திரமும் பெளர்ணமியும் ஒன்றாக இணையும் நன்நாளில் முறைப்படி நீராடினால் பாவங்கள் தீரும் என கூறினாராம். ஐயன் சிவன் சொன்னபடி புனித நதிகளும் அங்கு சென்று நீராடி, பாவங்களை தீர்த்து கொண்டனவாம்.
கும்பகோணம் பெயர்காரணம்
உலகத்தில் இருக்கும் உயிர்களை உருவாக்கும் விதைகளை அமிர்தம் நிறைந்த குடத்தில் போட்டு வைத்திருந்தார் பிரம்மா. வேடனாக வேஷம் பூண்டு வந்த சிவன், அம்பு கொண்டு அக்குடத்தை சாய்த்து அதிலிருந்து உயிர்களை உருவாக வைத்தாராம். குடமான கும்பத்தை, சிவன் தன் அம்பால் சேதமாக்கி வைத்த இடம் என்பதாலே இது கும்பகோணம் என்று அழைக்கப்பெற்றதாம். பிரம்மன் வைத்திருந்த அந்த குடத்தில் இருந்து விழுந்த ஒரு துளி அமிர்தமே இங்கு குளமாகி பாவம் போக்கி வருவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
20 தீர்த்தங்கள்
கும்பகோணம் மகாமகம் குளத்தில் 20 வகையான தீர்த்தங்கள் இருக்கின்றதாக கூறப்படுகிறது. பிரம்ம தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வாயு தீர்த்தம், யமுனை தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவிரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், பயோஷினி தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகிய 20 தீர்த்தங்களும் அங்கு உள்ளன.
இதையும் படிங்க: பூஜை ஆரத்தி தட்டில் ஏன் பணம் வைக்க வேண்டும் என்ற இந்து வழிபாட்டு பாரம்பரியம், நம்பிக்கையின் காரணம் தெரியுமா?
பாவங்கள் தீரும்!!
கும்பகோணத்தில் இருக்கும் 12 சிவன் கோயில்கள், 5 வைணவ கோயில்களின் தீர்த்தவாரி இந்த குளத்தில் வைத்து தான் நடைபெறுவது வழக்கம். கிட்டத்தட்ட 12 கோயில்களின் தீர்த்தவாரி ஒரே இடத்தில் நடப்பது இங்கு மட்டும் தான் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. பல்வேறு புனித நதிகளின் பாவங்களை தீர்ந்த நாள் தான் மாசி மகம் என்பதால், அதே நாளில் நாமும் அங்கு நீராடினால் நம் பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. இன்று, நேற்று அல்ல 1518ஆம் ஆண்டு தொடங்கி கும்பகோணத்தில் மகாமகம் விழா நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016ஆம் ஆண்டு மகாமகம் நடந்தது. அப்போது 10 நாள்கள் பிரம்மோற்சவமாக அந்த விழா நடத்தப்பட்டது. அடுத்த முறை கும்பகோணம் மகாமகம் 2028ஆம் ஆண்டு தான் நடத்தப்படும். அப்போது சென்று நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: மாசி சங்கடஹர சதுர்த்தி.. இந்த நேரத்தில் புது தாலிக்கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம்.. விலகும் ஓடும் சனி!