கந்தசஷ்டி விரதம் 6 ஆம் நாள் : ஒருநாள் விரதம் இப்படித்தான் இருக்க வேண்டும்.!
கந்தசஷ்டியின் ஆறாம் நாளான சூரசம்ஹாரத்தன்று ஒருநாள் மட்டும் விரதம் இருப்பதன் மகத்துவத்தையும், அதன் பலன்களையும் இந்த கட்டுரை விவரிக்கிறது. இந்த விரதத்தால் எதிர்மறை சக்திகள் நீங்கி வாழ்வில் வெற்றி பெறுவது போன்றவற்றை இது எடுத்துரைக்கிறது.

அற்புத பலன் தரும் ஒரு நாள் மட்டும் விரதம்
கந்தசஷ்டியின் 5 நாட்கள் விரதம் முடிவடைந்த நிலையில் ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அனைவரும் முழு ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாது. ஆனால் சஷ்டி திதியான ஆறாவது நாளில் ஒருநாள் விரதம் இருப்பது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. முருகப் பெருமான், சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த நாள் இதுவாகும். கந்தசஷ்டியின் அனைத்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி திதியான ஆறாவது நாளில், ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம்.
ஒருநாள் விரதம் எப்படி துவக்க வேண்டும்?
ஒருநாள் கந்த சஷ்டி விரதம் இருக்க நினைப்பவர்கள், இந்த ஆறாவது நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, காப்பு கட்டுவதாக இருந்தால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக் கொள்ளலாம். காலை 6 மணி முதல் 7 மணிக்குள் காப்புக் கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கலாம். வீட்டிலேயே காப்புக்கட்டிக்கொண்டோ அல்லது காப்பு கட்டாமலோ விரதத்தை மேற்கொள்ளலாம். தண்ணீர் மட்டும் குடித்தோ அல்லது தங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற வகையில் விரதம் இருந்து கொள்ளலாம். பால், பழம் மட்டும் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம்.
ஷட்கோண கோலம் வரைந்து வழிபாடு
வீட்டில் வழிபாடு நடத்துபவர்கள் ஷட்கோண கோலம் அமைத்து, அதில் 6 நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும். ஷட்கோண கோலம் என்பது நாம் நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்றி தரக் கூடிய சக்தி வாய்ந்ததாகும் என்பது ஐதீகம். காலை, மாலை இரண்டு வேளையும் ஷட்கோண கோலத்தின் மீது விளக்கேற்றி வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் ஆகியவை நைவேத்தியமாக படைக்க வேண்டும். முடிந்தவர்கள் 6 வகையான சாதங்களை படைத்து வழிபடலாம். அவற்றில் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் நிச்சயம் இடம் பெற வேண்டும். அதோடு ஒரு பெரிய டம்ளரில் காய்ச்சிய பாலுடன் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து சுவாமிக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். திருச்செந்தூரில் மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும் சமயம் வழிபாட்டிற்கு மிக உகந்தது.
கேட்டதை எல்லாம் தரும் சுப்பிரமணியன்
முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பிறகும் விரதம் இருப்வர்கள் அனைவரும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அவர்கள் குளித்து முடித்த பிறகு நைவேத்தியம் வைத்து படைக்க வேண்டும். ஒருநாள் விரதம் இருப்பவர்கள் சுவாமிக்கு நைவேத்தியமாக வைத்த பாலை குடித்து, சர்க்கரை பொங்கல் சிறிதளவு எடுத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். முழு சஷ்டி விரதம் அதாவது 7 நாட்கள் விரதம் இருப்பவர்கள் நைவேத்திய பாலை குடித்து விட்டு, விரதத்தை தொடரலாம்.
கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்
சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதம் நிறைவு செய்பவர்ள் சாம்பார், பொரியல், கூட்டு போன்றவற்றை வைத்து சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். சூரசம்ஹாரத்தன்று மாலை நேரத்தில் முருகன் பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் தலத்திற்குரிய கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஒம் சரவண பவ, ஓம் சண்முக பவ உள்ளிட்ட சுலோகங்களை சொல்லி வழிபாடு நடத்தலாம்.
வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு
முருகப் பெருமானுக்கு இன்று வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் முருகனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடலாம். வீட்டில் நைவேத்தியமாக செய்து வழிபட்ட சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் ஆகியவற்றை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு தானமாக வழங்கலாம்.
இந்த நாள் வெற்றியின் நாள்
கந்தசஷ்டி விரதம் என்பது முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகும். ஆறாம் நாளில் நடைபெறும் “சூரசம்ஹாரம்” தினம் மிகவும் சிறப்பானது. இதே நாளில் முருகன் சூரபத்மனை வதம் செய்து தேவர்களுக்கு விடுதலை அளித்தார் என்பதால், இந்த நாள் வெற்றியின் நாள் எனக் கருதப்படுகிறது.
வெற்றியும் அமைதியும் வாழ்க்கையில் நிறையும்
கந்தசஷ்டி சூரசம்ஹார தினம் என்பது நம் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை சக்திகளை நீக்கி, நல்லது நடக்கும் நாளாகும். ஒருநாள் விரதம்கூட முழு மனதுடன் கடைப்பிடித்தால் முருகனின் அருளால் அனைத்து துயரங்களும் நீங்கி, வெற்றியும் அமைதியும் வாழ்க்கையில் நிறையும்.