- Home
- Spiritual
- Lizard Vastu : கடவுள் புகைப்படங்களுக்கு பின்னால் பல்லிகள் இருக்கா? நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?
Lizard Vastu : கடவுள் புகைப்படங்களுக்கு பின்னால் பல்லிகள் இருக்கா? நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?
கடவுள் புகைப்படங்களுக்கு பின்னால் பல்லிகள் ஊர்ந்து செல்வதை கவனத்திருப்போம். ஆனால் இது நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Lizard behind god photo a good omen or spiritual sign
நம் வீடுகளில் சுவர்களில் ஊர்ந்து செல்லும் பல்லிகள் பலருக்கு பயமாகவும், அசிங்கமாகவும் தோன்றலாம். பெரும்பாலான நேரங்களில் ஒரு கடவுளின் புகைப்படத்திற்குப் பின்னால் பல்லிகள் மறைந்திருப்பதை நம்மால் காண முடியும். இந்து மத நம்பிக்கையின் படி பல்லி விழுவது, பல்லி சத்தம் போடுவது, பல்லிகள் கடவுள்களின் படங்களுக்குப் பின்னால் ஊர்வது குறித்து வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. பல்லிகள் கடவுளின் படங்களுக்கு பின்னால் இருப்பது குறித்து பொதுவான நம்பிக்கை எதுவும் இல்லை. பெரும்பாலும் இது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார பின்னணிகளை பொறுத்தது. சில கலாச்சாரங்களில் பல்லிகள் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஈர்க்கும் உயிரினங்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக வீட்டிற்குள் பல்லிகள் இருப்பது செல்வ வளத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது.
இந்து கோயில்களில் இடம் பெற்ற பல்லிகள்
இந்து புராணங்களின்படி பல்லிகள் குறிப்பிட்ட தெய்வங்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பல்லிகள் தங்கத்திலும், வெள்ளியிலும் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசலுக்கு மேல் தங்கத்தால் ஆன இரண்டு பல்லிகள் செதுக்கப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பின் போது இந்த பல்லிகளை வழிபட்டு அதன் பின்னரே பக்தர்கள் உள்ளே செல்வது வழக்கம். இந்த இரண்டு பல்லிகளும் சொர்க்கவாசலை முதலாவதாக அடைந்ததாகவும், அதன் காரணமாகவே இவை சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுவதுண்டு.
கடவுள் புகைப்படங்களுக்கு பின்னால் பல்லிகள் இருப்பது
கடவுளின் படங்களுக்கு பின்னால் பல்லிகள் ஒன்று செல்வதை பலரும் சாதாரண நிகழ்வாகவே கருதுகின்றனர். பெரும்பாலும் பல்லிகள் வீடுகளில் இருக்கும் வெப்பமான மற்றும் பாதுகாப்பான இடங்களை தேடும். கடவுளின் படங்கள் சுவரில் இருக்கும் பொழுது அவற்றின் பின்னால் உள்ள இடைவெளி பல்லிகளுக்கு ஒரு மறைவிடமாக இருக்கலாம். சிலர் பல்லிகள் கடவுளின் படங்களுக்கு அருகில் வருவதை புனிதமான அடையாளமாக கருதுகின்றனர். பல்லிகள் இந்து மத கலாச்சாரத்தில் அதிர்ஷ்டம் அல்லது தெய்வத் தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பல்லிகள் கடவுளின் படங்களுக்கு அருகில் இருப்பது அந்த வீட்டில் கடவுளின் ஆசீர்வாதம் பாதுகாப்பும் இருப்பதை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. பல்லிகள் அந்த வீட்டில் அதிர்ஷ்ட காவலர்களாக செயல்படுவதாக கருதப்படலாம்.
நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?
கடவுள் சக்தி நிறைந்த இடங்களாக பார்க்கப்படும் படங்களுக்கு அருகில் பல்லிகள் வரும் பொழுது அவை ஏதோ தெய்வீக நோக்கத்திற்காக வந்திருப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. இது ஒரு வகையான ஆசீர்வதிக்கப்பட்ட பிரசன்னமாக கருதப்படுகிறது. ஆனால் சிலரோ பல்லிகளை சுகாதாரமற்ற உயிரினங்களாக கருதுகின்றனர். கடவுள்களின் புனிதமான படங்களுக்கு பின்னால் அவை இருப்பது அந்த இடத்தை அசுத்தப்படுத்துவதாகவோ அல்லது எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதாகவோ நினைக்கின்றனர். பல்லிகளை பார்த்து பயம் கொள்ளும் நபர்கள் கடவுளின் படங்களுக்கு பின்னால் பல்லிகள் இருப்பதை பார்த்து கவலைப்படலாம் அல்லது கெட்ட சகுனமாக உணரலாம்.
தனிப்பட்ட நம்பிக்கைகளே காரணம்
ஆனால் கடவுளின் படங்களுக்கு பின்னால் பல்லிகள் இருப்பதற்கான சரியான விளக்கம் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் கண்ணோட்டத்தை பொறுத்ததே. நீங்கள் ஆன்மீக நம்பிக்கை கொண்டவராக இருந்தால் அதை நல்ல சகுனமாகவோ அல்லது கடவுளின் அருளாகவோ கருதலாம். அறிவியல் பூர்வமாக அல்லது நடைமுறையாக சிந்திப்பவராக இருந்தால் அதை பல்லியின் இயல்பான நடத்தையாக மட்டுமே பார்ப்பீர்கள். பல்லிகள் மீது வெறுப்பு கொண்டவராக இருந்தால் அதை நீங்கள் விரும்பத்தகாத ஒன்றாகவும், கெட்ட சகுனமாகவும் கருதலாம். இது போன்ற நிகழ்வுகள் சாதாரண சூழலியல் செயல்பாடாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் மனதுக்கு அமைதி அளிக்கும் வகையில் இதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பொருள் கொள்ளலாம்.