Tirupati Temple: இனி திருப்பதியில் பக்தர்களுக்கு இலவசம்! மீண்டும் அதிரடியாக களத்தில் இறங்கிய தேவஸ்தானம்!
Tirupati Temple: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு திருநாமம் வைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் மூலம் இலவசமாக திருநாமம் வைக்கப்படுகிறது. லட்டு பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள். இதன் காரணமாக உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசன வரிசைகளுக்கு செல்லும் முன்பு திருநாமம் வைக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக திருநாமம் வைக்கும் திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் பலரும் கோயில் வாசலில் திருநாமம் போடுவதற்கு ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்தனர். ஒரு சில பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை பிடுங்கியுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதாவது தேவஸ்தானம் மீண்டும் இலவசமாக திருநாமம் போடும் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமம் போட வேண்டியதில்லை. தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கை பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான நிர்வாக செயல் அதிகாரி சியாமளா ராவ் கூறுகையில்: கொரோனாவுக்கு பிறகு தற்போது மீண்டும் பக்தர்களுக்கு திருநாமம் வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஏ.டி.சி சந்திப்பு, வராக சுவாமி கோயில், வைகுண்டம் காம்பளக்ஸ், கோயில் முன்பு, வடக்கு மாடவீதி நுழைவில் இருஷிப்டுகளாக ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் வைக்கப்படும்.
இதையும் படிங்க: Tirupati Laddu: திருப்பதிக்கு போகாமலேயே ஏழுமலையானின் லட்டு சாப்பிடலாம்! தமிழகத்தில் எங்கெல்லாம் கிடைக்கும்?
லட்டு பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், பெங்களூர் தகவல் மையங்களில் மட்டுமே கிடைத்து வந்த லட்டு பிரசாதம் இனி ஆந்திர மாநிலம் ரம்ப சோவரம், ஒண்டிமிட்டா, பித்தாபுரம், விசாகப்பட்டினம் , விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும், பேசிய அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாததத்தில் மட்டும் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் உண்டியலில் ரூ.125 கோடியே 67 லட்சம் வசூலாகி உள்ளது. 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளன. திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு விரைவு திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.