- Home
- Spiritual
- கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
Should Women Wear Tilak After the Death of Their Husbands : கணவரை இழந்த பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றக்கூடாது, பொட்டு வைக்ககூடாது போன்ற வரைமுறைகள் உள்ளன. அது குறித்து தேச மங்கையர்கரசி கூறியுள்ள கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Should Women Wear Tilak After the Death of Their Husbands
இந்துமத மரபுகளின்படி பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது, திருமணமாகி கணவருடன் வாழும் சுமங்கலி பெண்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படுவதாக நம்பப்படுகிறது.
ஒரு பெண் தனது கணவரை இழந்த பின்னர் அவரது சுமங்கலி நிலை முடிந்து விடுவதாகவும், அவரது நெற்றியில் உள்ள குங்குமம், கழுத்தில் உள்ள தாலி, தலையில் அணியும் பூ, காலில் உள்ள மெட்டி போன்ற திருமண சின்னங்கள் அகற்றப்படுவது நம் கலாச்சாரத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
தேச மங்கையர்கரசி கொடுத்த விளக்கம்
இதை செய்வதன் நோக்கம், கணவர் இல்லாத நிலையில் ஒரு பெண்ணானவள் தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறாள் என்பதை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. கணவரை இழந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வதற்கும், தலையில் பூச்சூடி கொள்வதற்கும், சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்றுவது போன்ற செயல்களையும் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி இது குறித்து விளக்கம் அளித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கணவரை இழந்த பெண்கள் குறித்து அவர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
துன்பத்தில் ஆழ்த்துதல் கூடாது
அந்த வீடியோவில் தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளதாவது, “ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய துன்பம் என்பது தனது கணவனை இழப்பது தான். தந்தை, தாய், உற்றார், உறவினர் என யாரை இழந்தாலும் அவள் அவ்வளவு துன்பம் கொள்வதில்லை. ஆனால் கணவனை இழந்த பெண்களுக்கு ஏற்படும் துன்பம் என்பது மிகவும் கொடியதாகும்.
அந்த துன்பம் போல் உலகத்தில் வேறு எதுவும் இல்லை. அப்படி துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் பெண்ணை திரும்பத் திரும்ப நோகடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே துன்பத்தில் இருப்பவரை மறுபடியும் துன்பத்தில் ஆழ்த்துதல் கூடாது.
தாராளமாக முன்னின்று செய்யுங்கள்
அந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் பூஜைப் பொருட்களை தொடக்கூடாது, பிறரை பார்க்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்க கூடாது, வண்ணப் புடவைகளை அணியக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்தன. இது மனதை அடக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டவை. ஆனால் ஒரு பெண் தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இது போன்ற சமூக கட்டுப்பாடுகள் காரணமாக பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. மேலும் வீட்டில் விளக்கேற்றலாமா? திருவிளக்கு பூஜை செய்யலாமா? சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தலாமா? என்பது போன்ற பல சந்தேகங்கள் பெண்களுக்கு ஏற்படுகிறது.
சுப காரியங்களில் விளக்கேற்றலாம்
கணவனை இழந்த பெண்கள் தாராளமாக வீட்டில் விளக்கு ஏற்றலாம். திருவிளக்கு பூஜை செய்யலாம். பூ வைத்துக் கொள்ளலாம். பொட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரு பெண்ணுக்கு பூ, பொட்டு ஆகியவை கணவனுக்கு பின் வந்தது கிடையாது. இது பிறந்ததிலிருந்து பெண்களுக்கு உரியவை. இது தாய் வீட்டு சீதனம் போன்றவை.
எனவே சுமங்கலி பூஜையைத் தவிர அனைத்து பூஜையையும் கைம் பெண்கள் மேற்கொள்ளலாம். வளைகாப்பு, காதுகுத்து, திருமண நிகழ்ச்சிகள், புதிய வீடு கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் விளக்கு ஏற்ற அழைத்தால், மறுக்காமல் சென்று விளக்கேற்றலாம். நல்ல மனது இருப்பவர்கள் விளக்கு ஏற்றினால் அந்த காரியம் நல்லபடியாக நடக்கும் என்பது ஐதீகம்.
நல்ல மனதுடன் யார் வேண்டுமானாலும் செய்யலாம்
கைம்பெண்கள் தங்கள் பிள்ளைகளின் சுப காரியங்களில் தாராளமாக முன் நின்று விளக்கேற்றுங்கள். உங்களைவிட உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேறு யார் நினைத்து விட முடியும்? உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கிறது என்றால், மணமகளின் தாயாரோ, மணமகனின் தாயாரோ கைம்பெண்ணாக இருந்தால் அவர்களை ஒதுக்காதீர்கள்.
அவர்களை தாராளமாக முன் நிற்க வைத்து பாத பூஜை செய்யுங்கள். பெரிய மனதுடன் நடந்து கொள்ளுங்கள். எங்கெல்லாம் உங்களை நல்ல எண்ணத்துடன் வரவேற்கிறார்களோ அங்கெல்லாம் ஒதுங்கிச் செல்லாமல், முதல் ஆளாக நின்று சுப காரியங்களை தைரியமாக எடுத்து செய்யுங்கள்.
நாளை நமக்கும் இது நடக்கலாம் என்பதை யோசித்து செயல்படுங்கள்
ஒருவரின் வாழ்க்கை என்பது அவர்களின் தலை எழுத்துப்படியே நடக்கும். அதன்படியே அவர்கள் வாழ்க்கை அமையும். உங்கள் குடும்பத்தில் இது போன்ற கைம்பெண்கள் இருந்தால் அவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். அவர்களுக்கான உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள்.
உதாரணத்திற்கு உங்கள் அண்ணன் மனைவி கைம்பெண்ணாக இருந்தால் திருமண நிகழ்ச்சிகளில் குழந்தைகளை வாழ்த்துவதற்கு அவர்களையும் அழையுங்கள். “உங்கள் வழியாகத்தான் அண்ணனும் எங்கள் குழந்தைகளை வாழ்த்துவார்” என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை சொல்லி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நாம் அவர்களின் இடடத்தில் இருந்தால் எப்படி நடத்தப்படுவோம் என்பதை ஒரு நிமிடம் யோசித்து செயல்படுங்கள்.
கைம்பெண்களை ஒதுக்கி வைக்காதீர்கள்
இந்த அறிவுரைகள் கணவனுடன் வாழாத பெண்களுக்கும், குழந்தைகள் இல்லாத பெண்களுக்கும் பொருந்தும். நகரத்தார் சமூகத்தில் கைம்பெண்களைக் கொண்டு ஆரத்தி எடுப்பது வழக்கம். “நம் பெண்களை நாமே ஒதுக்கி வைத்தால் இந்த சமூகம் எப்படி அவர்களை மதிக்கும்” என்று இந்த வழக்கத்தை நகரத்தார் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.
நம் இனமான பெண்களை நாமே மதிக்காவிட்டால் வேறு யார் மதிப்பார்? அவர்களுக்கும் மனது உண்டு, கணவனை இழப்பது என்பது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே கைம்பெண் என்று சொல்லி சமூகத்தில் இருந்து அவர்களை ஒதுக்கி வைக்காதீர்கள்” என்று தேச மங்கையர்க்கரசி தனது வீடியோவில் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
பழமைவாதங்கள் ஒழிவது கலாச்சார முன்னேற்றமே
ஒரு பெண்ணுக்கு குங்குமம் அல்லது பொட்டு என்பது திருமணத்தின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது ஒரு கலாச்சார, அழகு சார்ந்த பொருளாக பழக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் பக்தி, ஆன்ம பலம், அழகு, உணர்ச்சி ஆகியவை கணவரின் மறைவால் குறைந்து விடுவதில்லை. இது திருமணத்தின் சின்னமாக பார்க்காமல் ஒரு பெண்ணிற்குரிய பொருளாக பார்க்க வேண்டும்.
எனவே வண்ணப் பொட்டுக்களை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இன்றைய சமூகத்தில் பொட்டு வைத்துக் கொள்வது என்பது பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். பெண்ணின் குடும்ப பாரம்பரியம், அவர் கற்ற கல்வி, தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு காரணமாக இது போன்ற பழமைவாதங்கள் ஒழிந்து மாற்றம் ஏற்படுவது கலாச்சார முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

