கிரகணம் முடிந்தபின் மீண்டும் திறக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்.. பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் நடை சாத்தப்பட்டதை அடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது.
chandra grahan 06
பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். கிரகத்தின் போது எந்த விதமான சுப காரியங்கள் செய்ய கூடாது என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் கோயில் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று 29ம் தேதி அதிகாலை மணி 1.05 க்கு துவங்கி மணி 2. 22 வரை ஒரு மணி 17 நிமிட நேரம் சந்திர கிரகணம் நடைபெற்றது.
tirupati balaji temple
கிரகணத்தை முன்னிட்டு நேற்று இரவு மணி 7:05க்கு ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிரகணம் முடிந்த பின் இன்று அதிகாலை மணி 2:30 மீண்டும் திறக்கப்பட்டது. கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் நேற்று இரவு வைக்கப்பட்ட அரக்கு முத்திரையை பிரித்து தங்களிடமிருந்த நீண்ட சாவியை பயன்படுத்தி ஏழுமலையான் கோவில் கருவறையை திறந்தனர்.
தொடர்ந்து கோவிலை தேவஸ்தான அர்ச்சகர்கள் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்தனர். பின்னர் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய கட்டண சேவைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. சந்திர கிரகணத்தால் 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் அன்றைய மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.