- Home
- Spiritual
- Aadi Pooram 2025: குழந்தை வரமருளும் ஆடிப்பூரம்.! எப்படி வழிபட வேண்டும்? எளிமையான வழிமுறைகள் இதோ
Aadi Pooram 2025: குழந்தை வரமருளும் ஆடிப்பூரம்.! எப்படி வழிபட வேண்டும்? எளிமையான வழிமுறைகள் இதோ
ஆடிப்பூரம் என்பது அம்மனுக்குரிய சிறப்பான நாள்களில் ஒன்றாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடிப்பூரம் அன்று எப்படி வழிபாடு செய்வது? என்பது குறித்த சில முக்கிய வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆடிப்பூரம் 2025 (Aadi Pooram 2025)
ஆடிப்பூரத்தன்று அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்பிகைக்கு வளைகாப்பு திருவிழா நடத்தப்படுகிறது. அம்பிகை தாய்மை கோலம் கொண்ட நாள் இது என்பதால் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு இது முக்கியமான நாளாகும். குழந்தை இல்லாத பெண்கள் இன்று (ஜூலை 28) கோயில்களுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து வழிபட வேண்டும். முடிந்தால் 27, 29, 31 போன்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வளையல்களை வாங்கிக் கொடுக்கலாம். அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை பிரசாதமாக பெற்று வந்து அணிந்து கொள்ள வேண்டும். இது குழந்தை பாக்கியத்தை அருளும் என்பதும் ஐதீகம். வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பும் இதேபோன்று கண்ணாடி வளையல்களை மாலையாக கோர்த்து அணிவித்து வழிபடலாம்.
ஆடிப்பூரத்தில் எப்படி வழிபட வேண்டும்?
ஆடிப்பூரத்தன்று இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக ஏழை சுமங்கலி பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கை துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். இதுவும் குழந்தை பாக்கியத்தை அருளும் என்று நம்பப்படுகிறது. ஆடிப்பூர நாளில் முளைகட்டிய தானியத்தை (நவ தானியங்கள்) அல்லது குலதெய்வத்திற்கு உகந்த தானியங்களை படைத்து அதன் பின்னர் உட்கொள்வதன் மூலமும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சர்க்கரை பொங்கல், பானகம், நீர் மோர், கூழ் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். சிலர் வளைகாப்பு விழாவில் போடும் கலவை சாதமாக ஐந்து ,ஏழு அல்லது ஒன்பது வகையான சாதங்களை செய்து படைப்பதும் உண்டு.
குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்
அபிராமி அந்தாதி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற சக்தி வாய்ந்த ஜெபங்களையும், ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்யலாம். ஆடிப்பூரத்தன்று சில குடும்பங்களில் குலதெய்வ வழிபாடுகளை செய்வது வழக்கம். குலதெய்வம் குடும்பத்தின் காவல் தெய்வம் என்பதால் குழந்தை பாக்கியத்திற்கு அவர்களின் அருள் மிகவும் முக்கியம். எனவே இந்த தினத்தில் குலதெய்வ வழிபாடுகள் மேற்கொள்ளலாம். ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் அவதரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே திருவரங்கம் போன்ற கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெறும். இது போன்ற ஒரு உற்சவங்களில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பூரம் வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?
ஆடிப்பூரத்தன்று கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம். காலையில் குளித்துவிட்டு, சுத்தமான உடை அணிந்து கொள்ள வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு மணப்பலகையில் கோலமிட்டு அம்பிகையின் படத்தை அல்லது சிலையை கிழக்கு முகமாக வைக்க வேண்டும். அம்பிகைக்கு உகந்த செந்நிற மலர்களான அரளி, ரோஜா, தாமரை ஆகியவற்றை வைத்து அலங்கரிக்கலாம். கண்ணாடி வளையல்களை கோர்த்து அம்பிகை படத்திற்கு சாற்ற வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம், வெற்றிலைப் பாக்கு, தேங்காய் பழம் போன்ற மங்கலப் பொருட்களை வைக்கவும். அம்மனுக்கு பிடித்த பட்சணங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் போன்றவற்றை செய்து நெய்வேத்யம் சமர்ப்பிக்க வேண்டும். அம்மனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்து முழு மனதுடன் வழிபட வேண்டும்.
வழிபாட்டை முழுமனதுடன் செய்யுங்கள்
இந்த வழிபாடுகளை முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் மேற்கொள்ள வேண்டியது முக்கியம். ஆன்மீக வழிபாடுகளுடன் மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சை முறைகளையும் தொடர்ந்து பெற வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் ஆடிப்பூரத்தன்று அம்மனை மனதார வழிபட்டு குழந்தை பாக்கியம் பெறுங்கள்.