Karthik : நடிகர் கார்த்திக்கின் பாலிசி! இதனால் பல பட வாய்ப்பை இழந்தாராம்.. இயக்குனர் விக்ரமன் கூறிய சீக்ரெட்!
பிரபல இயக்குனர் விக்ரமன், பழம்பெரும் நடிகர் கார்த்திக் வைத்திருக்கும் பாலிசி குறித்தும்... இதனால் அவர் சிவாஜி உட்பட பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர், முத்து ராமன் - சுலோகச்சனா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் நடிகர் கார்த்திக். 90-களில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிய கார்த்தி 1960-ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர். ஆனால் இவர் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான்.
தன்னுடைய 21 வயதில், இயக்குனர் பாரதி ராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தான் பிரபல நடிகை ராதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். 1981-ஆம் ஆண்டு வெளியான இப்படம், கார்த்திக் - ராதா இருவருக்குமே திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இந்த படத்தை தொடர்ந்து, நினைவெல்லாம் நித்யா, வாலிபமே வா வா, இளஞ்சோடிகள், கண்ணே ராதா, கேள்வியும் நானே பதிலும் நானே, என பல படங்களில் நடித்தார். ஒரு வருடத்திற்கு கார்த்திக் நடிப்பில் சுமார் 5 படங்கள் வெளியானது. ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல் தன்னுடைய நடிப்பில் வித்தியாசம் காட்ட நினைத்த கார்த்தி தேர்வு செய்து நடித்த படம் தான் அக்னி நட்சத்திரம். இந்த படம் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை கார்த்திக்கு பெற்று தந்தது சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.
1990-களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பிய கார்த்தி, கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன், நாடோடித் தென்றல், பொன்னுமணி, லக்கி மேன், கோகுலத்தில் சீதை, பிஸ்தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், போன்ற பல படங்களில் தன்னுடைய காமெடி திறமையையும் வெளிக்காட்டி நவரச நாயகன் என பெயரெடுத்தவர்.
கடைசியாக கார்த்திக், 'தேவ்' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உடல்நல பிரச்சனை காரணமாக, முழுமையாக திரையுலகில் இருந்து விலகியே உள்ளார். நடிகர் என்பதை தாண்டி பாடகர் மற்றும் அரசியல் பிரபலமாக அறியப்படுபவர் கார்த்தி. ராகினி - ரதி என அக்கா தங்கைகளையே திருமணம் செய்து கொண்ட கார்த்திக்கின் மூத்த மகன், கெளதம் கார்த்திக்கும் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் வைத்திருந்த பாலிசி காரணமாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது கார்த்திக் தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களிடம் தினமும் காலை 6 மணிக்கு எல்லாம் என்னால் ஷூட்டிங் வர முடியாது. 11 மணிக்கு தான் வருவேன் என கூறி விடுவாராம்.
காரணம் அவர் காலையில் எழுந்திரிக்க நேரம் ஆகும் என்பதால் தான். ஆனால் 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்தால், இரவு 1 மணி வரை கூட அசராமல் நடிப்பாராம். இவரின் இந்த 11 மணி பாலிசியின் காரணமாக சிவாஜி கணேசன் உட்பட பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததாக தெரிவித்துள்ளார் விக்ரமன்.