சேரன் - டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை பாஸ்-ஆ? பெயிலா? முழு விமர்சனம் இதோ
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் சேரன், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி உள்ள நரிவேட்டை திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Narivettai Movie Review
டொவினோ தாமஸ் நடிப்பில், அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் நரிவேட்டை. சுராஜ் வெஞ்சாரமூடும், பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரனும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற அபின் ஜோசப் திரைக்கதை எழுதியுள்ளார். பிரியம்வத கிருஷ்ணா, ஆர்யா சலீம், ரினி உதயகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்த்துள்ளனர். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
நரிவேட்டை படத்தின் கதை
ஒரு சமூக நீதிக்கான குரலாக தான் இந்த நரிவேட்டை படம் அமைந்துள்ளது. ஆதிவாசி நிலப் போராட்டத்தின் பின்னணியில், வர்கீஸ் என்ற போலீஸ் அதிகாரியின் போராட்டத்தைச் சித்தரிக்கும் படம் தான் இது. நான் லீனியர் முறையில், வர்கீஸின் கடந்த கால நிகழ்வுகளும் நிகழ்காலமும் இணைந்து கதை நகர்கிறது. பி.எஸ்.சி தேர்வு எழுதி வேலைக்காகக் காத்திருக்கும் வர்கீஸ், குடும்ப சூழ்நிலை காரணமாக போலீஸ் வேலையில் சேர்கிறார். வயநாட்டில் ஆதிவாசி நிலப் போராட்டத்தின் போது அவர் எதிர்கொள்ளும் சவால்களும், அதன் மூலம் அவர் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் விதமும் தான் கதையின் மையக் கரு.
நரிவேட்டை படத்தின் விமர்சனம்
'மறதிகளுக்கு எதிரான நினைவுகளின் போராட்டம்' என்ற டேக் லைனுடன் வெளியாகியுள்ள இப்படம், உயிர்வாழ்வதற்கான போராட்டத்தையும் பேசுகிறது. முத்தங்க போராட்டம், செங்காரா போராட்டம், பூயம்குட்டி போராட்டம் போன்ற அனைத்து போராட்டங்களையும் நினைவுகூறும் வகையில், அதன் கதையை நியாயமான முறையில் அணுகும் படமாகவும் இது உள்ளது. ஆனால், இது ஒரு ஆவணப்படம் போல இல்லாமல், ஒரு திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நரிவேட்டை படம் எப்படி இருக்கு?
கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற அபின் ஜோசஃபின் கதை மற்றும் திரைக்கதை படத்தின் பலம். டொவினோ தாமஸ், ஆர்யா சலீம், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன் ஆகியோரின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் படத்திற்கு மெருகூட்டுகின்றன. இன்றும் விவாதிக்கப்படும் ஆதிவாசி நில உரிமை போராட்டம் குறித்து புதிய விவாதங்களை எழுப்பும் விதமாக நரிவேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக நீதிக்கான குரல் கொடுக்கும் ஒரு முக்கியமான படைப்பாக இப்படம் அமைகிறது.