Jockey Review : கிடா சண்டை அடிபொலியாக இருந்ததா? ஜாக்கி படத்தின் விமர்சனம் இதோ
பிரகபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள ஜாக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jockey Movie Review
மதுரை மண்ணின் மணமும், வியர்வையும், பாரம்பரியமும் கலந்த ஒரு அரிய விளையாட்டை திரையின் மையத்துக்கு கொண்டு வந்திருக்கும் படம் ‘ஜாக்கி’. ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போலவே காலம் காலமாக மதுரை சுற்றுவட்டாரங்களில் நடக்கும் கிடா முட்டு சண்டை – இதை முழுக்க முழுக்க கதையின் தளமாக வைத்து உருவான முதல் திரைப்படம் இது என்பதே இப்படத்தின் பெரிய பலம்.
மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமராக யுவன் கிருஷ்ணா. அவன் உயிராக வளர்க்கும் கிடா ‘காளி’. அது தான் அவனின் உலகம். ஆண்டுதோறும் கிடா முட்டு போட்டியில் வென்று பதக்கம் வாங்கும் ஆதிக்க வீரன் கார்த்தியாக ரிதான் கிருஷ்ணாஸ். இந்த இருவரையும் நேருக்கு நேர் நிறுத்தும் ஒரு போட்டியே கதையின் திருப்புமுனை. எதிர்பாராத வகையில் ராமரின் கிடா காளி வெற்றி பெற, தோல்வியை ஏற்க முடியாத கார்த்தியின் கோபம் கொடூரமாக மாறுகிறது. அதன் விளைவாக உருவாகும் மோதல்களும், பழிவாங்கும் முயற்சிகளும், ஆக்சன் நிறைந்த கிளைமாக்ஸுடன் சொல்லி உள்ள படம் தான் ஜாக்கி.
ஜாக்கி விமர்சனம்
இதற்கு முன் சில படங்களில் கிடா முட்டு சண்டை ஒரு காட்சியாக மட்டுமே வந்திருக்கிறது. ஆனால் ‘ஜாக்கி’யில் அந்த விளையாட்டின் வரலாறு, அதன் மரபு, அதற்குள் இருக்கும் உணர்ச்சி, பெருமை, வன்முறை என அனைத்தையும் சேர்த்து ஒரு முழுமையான திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பிரகபல். மூன்று ஆண்டுகள் மதுரையிலேயே தங்கி ஆய்வு செய்து எழுதப்பட்ட கதை என்பதால், ஒவ்வொரு காட்சியிலும் அந்த மண்ணின் நிஜம் வெளிப்படுகிறது.
ராமர் கதாபாத்திரத்தில் யுவன் கிருஷ்ணா காட்டும் பாசமும், கிடாவுடன் அவர் உருவாக்கும் உணர்ச்சிப் பிணைப்பும் மிக இயல்பாக வெளிப்படுகிறது. நடிப்பல்ல, வாழ்ந்த அனுபவம் போலவே அவரது நடிப்பு இருக்கிறது. எதிர்துருவமாக கார்த்தியாக வரும் ரிதான் கிருஷ்ணாஸ் தொடக்கம் முதல் முடிவு வரை வில்லத்தனத்தின் கம்பீரத்தை தக்க வைத்திருக்கிறார். முரட்டுத்தனமான கிடாவுடன் அவர் பழகும் காட்சிகள், கதாபாத்திரத்தின் ஆக்கிரமிப்பை அழுத்தமாக சொல்லுகின்றன.
ஜாக்கி படம் எப்படி இருக்கு?
கிடாக்கள் நேருக்கு நேர் மோதும் தருணங்களில் எழும் கொம்பு மோதல் சத்தமும், அதனுடன் சேரும் பின்னணி இசையும் பார்வையாளரை நேரடியாக சண்டை மைதானத்துக்குள் இழுத்துச் செல்கிறது. அந்த காட்சிகளில் திரையரங்கமே அதிரும் அனுபவம் கிடைக்கிறது.
அம்மு அபிராமி காதல் கோணத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். கதையின் ஓட்டத்தில் அவருக்கான இடம் குறைவாக இருந்தாலும், தேவையான அளவுக்கு பாத்திரத்தை நிறைவேற்றியுள்ளார். வழக்கமாக வில்லன் வேடங்களில் தோன்றும் மது சூதனராவ், இந்த படத்தில் நடுவராக வருவது சுவாரஸ்யமான மாற்றம்.
ஜாக்கி ரிவ்யூ
படத்திற்கு உயிரூட்டும் மற்றொரு அம்சம் தொழில்நுட்ப குழு. தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணதாஸ் இப்படத்தை நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ளார். இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் பின்னணி இசை மதுரை மண்ணின் கம்பீரத்தையும், கிடா சண்டையின் வேகத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. என். எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவு பழைய மதுரையின் முகத்தை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. ஆர்.பி. பாலாவின் வசனங்கள் அருமை.
‘மட்டி’க்குப் பிறகு இயக்குநர் பிரகபல் தேர்ந்தெடுத்திருக்கும் ‘ஜாக்கி’ ஒரு கடினமான, வித்தியாசமான முயற்சி. அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். மொத்தத்தில் ஜாக்கி – தமிழ் திரையில் இதுவரை முழுமையாக காணாத, கிடா முட்டு சண்டையின் துடிப்பையும் உணர்ச்சியையும் சொல்லும் மண் மணம் மாறாத படம்.

