Once More Review : ஒன்ஸ்மோர் படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Once More Movie Review : புதுமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Once More movie Review
அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படம், காதல் உறவில் ஏற்படும் பிரிவு, அதன்பிறகு ஒருவரை ஒருவர் கடந்து செல்வது, மீண்டும் வாழ்க்கையில் காதலுக்கு இடம் கொடுப்பது என நுட்பமான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. வழக்கமான காதல் படங்களுக்கான டெம்பிளேட்டுகளுடன் பயணிக்காமல், ஒரு உறவில் நிகழும் சின்னச் சின்ன சம்பவங்கள் மற்றும் சொல்லாமல் மனதிற்குள் புதைத்து வைத்திருக்கும் உணர்வுகளை முன்னிலைப்படுத்துகிறது ‘ஒன்ஸ்மோர்’. இதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
ஒன்ஸ்மோர் கதை என்ன?
ஒன்ஸ்மோர் படத்தில் அர்ஜுன் தாஸ் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த கால காதல் அனுபவத்திலிருந்து வெளியேறி, வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பயணிக்கிறார். பழைய காதலின் நினைவுகள் முற்றிலும் மறைந்துவிட்டதாக ரகு நினைக்கும் நேரத்தில், எதிர்பாராத வகையில் கடந்த கால காதல் மீண்டும் அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறது. இதனால் ஏற்கனவே அமைதியாக சென்றுகொண்டிருந்த அவரது வாழ்க்கை குழப்பமடைகிறது.
ஒருபுறம் கடந்த காலத்தின் நினைவுகளும், மறுபுறம் நிகழ்காலத்தில் உருவாகும் புதிய பந்தமும் ரகுவை ஒரு உணர்ச்சிப்பூர்வமான சிக்கலுக்குள் தள்ளுகின்றன. அதன் பின்னர் காதல் என்றால் ஒருவரை தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல; ஒருவரை புரிந்துகொள்வது, சில நேரங்களில் விட்டுக்கொடுப்பது, மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்வது என பல விஷயங்களை படம் பேசுகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பு எப்படி?
‘ஒன்ஸ்மோர்’ படத்தின் முக்கியமான பலம் அர்ஜுன் தாஸின் நடிப்பு. ரகுவின் மனநிலையை அவர் ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னம்பிக்கையுடன் இருக்கும் இளைஞன் முதல் காதல் பிரிவால் உடைந்து நிற்கும் மனிதன் வரை பல்வேறு மனநிலைகளை நுட்பமாகக் கடத்துகிறார். குறிப்பாக அதிக வசனங்கள் இல்லாத காட்சிகளில் அவரது கண்களும் முகபாவனைகளும் கதாபாத்திரத்தின் உணர்வுகளை நன்றாக பிரதிபலிக்கின்றன. காதல், குழப்பம், ஏக்கம், மனவலி என ரகுவின் பயணத்தை இயல்பாக கொண்டு சென்றிருப்பதால், அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது.
அதிதி ஷங்கர் எப்படி?
அதிதி ஷங்கரும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். காட்சிகளை மிகைப்படுத்தாமல், கதாபாத்திரத்தின் உணர்வுகளை எளிமையாக வெளிப்படுத்துகிறார். அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் இடையிலான கெமிஸ்ட்ரி படத்திற்கு பலம் சேர்க்கிறது. இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் இயல்பாக அமைந்துள்ளதால், அவர்களின் உறவும் திரையில் நம்பகத்தன்மையுடன் தெரிகிறது. குறிப்பாக இருவரும் தங்களுடைய மனதில் இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக பேசும் தருணங்கள் படத்தின் உணர்ச்சிப்பூர்வமான பகுதிகளாக அமைகின்றன.
சோனா ஒலிக்கல் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். முக்கோண காதல் கதையின் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அவர், முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கருடன் அவர் இடம்பெறும் காட்சிகள் கதையின் உணர்வுப்பூர்வமான மோதலை மேலும் வலுப்படுத்துகின்றன.
இசை - ஒளிப்பதிவு - இயக்கம் எப்படி இருக்கு?
‘ஒன்ஸ்மோர்’ படத்தின் உணர்வுகளை உயர்த்துவதில் ஹேஷம் அப்துல் வஹாபின் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. பாடல்கள் தனியாக திணிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல், கதையின் சூழலோடு இணைந்து பயணிக்கின்றன. காதல் மற்றும் பிரிவு காட்சிகளுக்கு பின்னணி இசை கூடுதல் அழுத்தம் கொடுக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், படத்தின் மென்மையான காதல் உணர்வுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் காதல் கதையை மிக எளிமையான பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார். பெரிய அளவிலான பிரம்மாண்ட அம்சங்களை அதிகம் நம்பாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். காதலில் ஏற்படும் பாதுகாப்பின்மை, பிரிவுக்குப் பிறகு மீண்டும் ஒரு உறவை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம், ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல் போன்ற விஷயங்களையும் படம் தொட்டுச் செல்கிறது.
குறைகள் என்ன?
படத்தில் பரபரப்பான திருப்பங்கள் அல்லது பெரிய அளவிலான சம்பவங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ‘ஒன்ஸ்மோர்’ சற்று மெதுவான அனுபவமாக இருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மையமாக வைத்தே நகர்கின்றன.
குறிப்பாக திரைக்கதையின் வேகம் சில இடங்களில் குறைவதாகத் தெரிகிறது. இன்னும் சற்று கத்தரித்து வேகத்தை கூட்டியிருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில் நடிகர்களின் நடிப்பு, இசை மற்றும் காட்சியமைப்பு ஆகியவை இந்தத் தொய்வை பெரும்பாலும் சமாளித்து விடுகின்றன. காதல் படங்களை விரும்புபவர்களுக்கு ‘ஒன்ஸ்மோர்’ ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.

