சிபிஐ பிடியில் சிக்கிய விஜயின் குடுமி.. தவிக்கும் தவெக..! இதுதான் பாஜகவின் திட்டமா..?
சிபிஐ வசம் எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருந்தும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என சிபிஐ தீவிரம் காட்டுவதற்கு விஜயை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜகவின் நெருக்கடியாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டெல்லிக்கு வரும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் விவகாரத்தில் தவெக நிர்வாகிகளிடம் இரண்டு கட்டமாக கரூரிலும், டெல்லியிலும் விசாரணை நடத்திய சிபிஐ விஜயை விசாரணை வழங்கியதிற்குள் கொண்டு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கரூர் துயர சம்பவம் குறித்து சுற்றி சுழன்று மின்னல் வேகத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ கடைசியாக விஜய்க்கு குறி வைத்து சம்மன் அனுப்பி உள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரசியல் வரலாற்றிலேயே கரும்புள்ளியாக மாறியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி கண்காணிப்பில் கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதலில் கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
அதோடு கரூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி, விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கிய டிஎஸ்பி ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அத்தோடு கூட்டத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து இரண்டாம் கட்ட விசாரணை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் இறுதியாக விஜய்க்கு சமன் அனுப்பியுள்ளது. வருகிற 12-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக சமன் அனுப்பப்பட்டு இருக்கிறது. விஜய்யை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்தபோது அவரிடம் என்னென்ன மாதிரியான கேள்விகளை முன்வைக்க வேண்டும் என்ற பட்டியலை சிபிஐ தயார் செய்துள்ளது.
விஜயிடம் கிடுக்குப்பிடி கேள்விகள்
கரூர் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டு தாமதமாக சென்றதாக விஜய் மீது எழுந்த முக்கியமான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. கரூர் பிரச்சார கூட்டத்திற்கு போலீசார் தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து ஏழு மணி வரை என்ற நிலையில் தவெக சமூகதளப் பக்கத்தில் 12 மணிக்கு விஜயின் மக்கள் சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூட்டம் காண்பிக்க விஜய் திட்டமிட்டு தாமதமாக வந்ததாக சொல்லப்படும் நிலையில் அது குறித்து கேள்விகள் முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது.
கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பிரச்சார வாகனத்தை முன்கூட்டியே நிறுத்தச் சொல்லி போலீஸ் கூறியும் தவெகவினர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் விஜயிடம் கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது. போலீஸ் அறிவுறுத்தல் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? தனது கவனத்திற்கு வந்தும் கூட வாகனத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வற்புறுத்தினாரா விஜய்? என்ற தொனியிலும் கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் இருக்கையில் இருந்த வாகனத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வற்புறுத்தினாரா விஜய்? என்றும் கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாட்சிகளை கலைத்தாரா விஜய்
அதோடு கரூர் பார்டரில் பிரச்சார வாகனம் நுழைந்ததும் முன் இருக்கையில் இருந்து எழுந்து விஜய் உள்ளே சென்றுவிட்டார் என்பதால் சாலையின் இரு புறமும் கூடி இருந்த மக்களும் வேலுச்சாமிபுரம் நோக்கி வந்து விட்டார்கள் எனவும் கூட்ட நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவ்வளவு நேரம் முன் இருக்கையில் அமர்ந்து விட்டு கரூர் வந்ததும் பின் இருக்கைக்கு சென்றது ஏன்? வேலுச்சாமிபுரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் பின்னாடி சென்றாரா அல்லது என்ன நடந்தது? என்பது குறித்து விஜய் இடம் கேள்விகள் முன் வைக்கப்படும். இவை எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான விஷயம் என்னவென்றால் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்த நிகழ்வுதான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் வைத்து சந்தித்து பேசினார் விஜய். அந்த நிகழ்வுகளில் மீடியாக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத சூழலில் சாட்சிகளை கலைக்கும் வகையில் விஜய் செயல்பட்டாரா?
விஜயை சுற்றி வளைக்கிறதா பாஜக..?
அந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியது என்ன? என்பது குறித்தும் விஜயிடம் சிபிஐ கேள்விகளை கேட்கும் என சொல்கிறது டெல்லி வட்டாரம். கரூர் விவகாரத்தை பொருத்தவரையில் விஜய்க்கு சம்மம் அனுப்பி விசாரணை நடத்துவது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் இந்த அழைப்பை அரசியலுடன் தொடர்பு படுத்தாமலும் இருக்க முடியாது. ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடந்தாலும் விசாரணை நடத்தும் சிபிஐ அமைப்பு பாஜகவின் கைக்குள் தான் இருக்கிறது. ஆகையால் கரூர் விவகாரத்தை வைத்து விஜயை கூட்டணி வலையில் சிக்க வைக்க பாஜக எடுக்கும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.
சிபிஐ வசம் எத்தனையோ வழக்குகள் நிலுவையில் இருந்தும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என சிபிஐ தீவிரம் காட்டுவதற்கு விஜயை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜகவின் நெருக்கடியாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. கரூர் விசாரணை முடிவு விஜயின் அரசியல் பயணத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? எப்படி தீர்மானிக்க போகிறது என்று போக போகத்தான் தெரியும்.
