அதிமுக மதுரை மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணானது ஏன்.? காரணம் யார்.? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
அதிமுக மாநாட்டு வெற்றியை குறை சொல்ல முடியாததால் புளியோதரை தோல்வியை பற்றி பேசுவதாக ஆர்.பி.உதயகுமார் கூறினார் 10 இலட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது, அதில் சிந்தி, சிதறிய புளியோதரை குறித்து பேசி வருவதாகும் தெரிவித்தார்.
மதுரை அதிமுக மாநாடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளாரக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் அதிமுக மாநில மாநாடுக்கு தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளும் தயாரானது.
சுமார் 4 மாதங்களாக பணியானது தீவிரமாக நடைபெற்றது. இதற்கான பல குழுக்களையும் அமைக்கப்பட்டது. மாநாட்டில் 10 முதல் 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து மாநாட்டிற்கு வருபவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. நெல்லை கேட்டரிங் என்ற நிறுவனம் வசம் உனவு சமைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது . இதற்காக சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
வீணான உணவுகள்
இதற்காக அமைக்கப்பட்ட பந்தல்களில் தனித்தனி அண்டாக்களில் வெரைட்டி ரைஸ்கள் தயாரிக்கப்பட்டது. பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், புளியோதரை என வெரைட்டி வெரைட்டியாக உணவுகள் தயாரிக்கப்பட்டன. இதனையடுத்து அதிமுக மாநாடு காலை கொடியேற்றத்துடன் தொடங்கியதையடுத்து அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகமமும் தொடங்கப்பட்டது. ஆனால் புளியோதரை உள்ளிட்ட உணவுகள் சரியாக வேகாமல் இருந்துள்ளது. இதனை தொண்டர்களால் சாப்பிட முடியாமல் கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து மாநாடு முடிந்து அடுத்த நாள் மாநாடு மேடை அமைந்திருந்த பகுதி முழுவதும் புளியோதரை உள்ளிட்ட உணவு பொருட்கள் மலை மலையாக குவிந்து கிடந்தது அங்கு வந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணானதாக செய்தி பரவியது.
மாநாட்டில் நடந்தது என்ன.?
இந்தநிலையில் மதுரையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 30 கிலோ மீட்டர் தொலைவிற்கு தொண்டர்கள் காத்திருந்து மாநாட்டுக்கு வந்தனர். அதிமுக மாநாடு மதுரை மண்ணுக்கு பெருமையாக அமைந்துள்ளது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் புரட்சித்தமிழராக எடப்பாடி கே.பழனிச்சாமி திகழ்கிறார். மாநாட்டில் அதிமுக கொடியேற்றிய எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சென் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை கொடியேற்றுவார் என தெரிவித்தார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை மாநாட்டுக்கு வந்த அதிமுக தொண்டர்களை திருப்பி அனுப்பி உள்ளது. தடைகளை தாண்டி மாநாட்டுக்கு அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர்
உணவு வீணாக காரணம் யார்.?
அதிமுக மாநாட்டிற்கு 50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையின் குளறுபடியால் 35 லட்சம் தொண்டர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது தொண்டர்கள் அதிக அளவு வருவார்கள் என அவசர கதியில் அதிகமாக உணவு சமைக்கப்பட்டதன் காரணமாகவே உணவு மிஞ்சியது. காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்த இருந்தால் மாநாட்டுக்கு 50 இலட்சம் தொண்டர்கள் வந்து இருப்பார்கள். மாநாட்டு வெற்றியை பேசுவதற்கு இடமில்லாமல் புளியோதரை தோல்வியை பேசுவதாக கூறியவர், 10 இலட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது, அதில் சிந்தி, சிதறிய புளியோதரை குறித்து பேசி வருவதாகும் தெரிவித்தார்.