- Home
- Politics
- உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!
திமுகவுக்கு 159 தொகுதிகளில் நிற்கிறது. கூட்டணி முடிவாவதை பொருத்து இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்

திமுக கூட்டணிக்கு ராகுல் உறுதி
கூவி கூவி கூட்டணி டெம்போவை நிரப்பி வருகின்றனர் தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகள். அந்த வகையில் ஆளும் கட்சியான அறிவாலயம் மொத்த சீட்டுகளையும் நிரப்பி கொண்டு ஹவுஸ்ஃபுல்லாக தேர்தல் களத்தை நோக்கி கிளம்பிவிட்டது. 234 தொகுதிகளில் யாருக்கு எவ்வளவு? என திமுக பிரித்துக் கொடுக்கும் கணக்கு கூட்டணி கட்சிகளின் ஹாட் பீட்டை எகிற வைக்கும் தகவல்.
கூட்டணி பேச்சு வார்த்தைகளில் பங்கெடுத்துள்ள மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘முதலில் இந்த கூட்டணியில் பார்க்க வேண்டியது காங்கிரஸ்தான். ஏனெனில் திமுக கூட்டணியில் தொடர்ந்து 22 வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கும் அக்கட்சி, கடந்த ஒரு வருடமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோஷத்தை எழுப்பி, திமுகவை பாடாய்படுத்தி வந்தது. இதற்காக தவெகவை பயன்படுத்தியதுதான் உச்சகட்ட அரசியல். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி டெல்லியில் ராகுலை சந்தித்து பேசினார் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி. அப்போது ராகுல்,‘நாங்கள் தேசிய கட்சி. ஆனால் எங்களுக்கான முக்கியத்துவம் கூட்டணியில் குறைந்து கொண்டே வருகிறது. 63 தொகுதிகளில் இருந்து 25 தொகுதியாக காங்கிரசை சுருங்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
ராகுலிடம் கனிமொழி வைத்த கோரிக்கை
மேலும் அவர், இம்முறை 40 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அதற்கு கனிமொழி தரப்பில் ‘28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வரை காங்கிரஸுக்கு வழங்க தலைமை முடிவெடுத்து இருக்கிறது. தவிர புதுச்சேரியில் நீங்கள் பெரும்பான்மை இடங்களில் நிற்கவும், ஆட்சி அமைக்கவும் பக்கபலமாக இருப்போம். அசாம் மாநில தேர்தல் செலவுக்கு திமுக சார்பில் நீதி வழங்க முடிவிலும் தலைமை இருக்கிறது’ என ராகுலிடம் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் காங்கிரஸ் மேற்பார்வையாளர் கிரிஷ் ஷோடங்கரை மாற்ற வேண்டும். இல்லை என்றால் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான குழுவில் அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் உங்களிடம் எங்களை பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்துகிறார்கள். தளபதி விமர்சித்து பேசினார் என சொல்லி இருக்கிறார்கள். நீங்களோ தளபதி என்றால் ஸ்டாலின் என நினைக்கிறீர்கள். ஆனால் அந்த தளபதி ஸ்டாலின் அல்ல. திமுகவில் அப்படியான பெயர் கொண்ட எம்எல்ஏ ஒருவர் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். ஓஹோ அப்படியா? ஏதோ மிஸ் கம்யூனிகேஷனில் தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது என வருத்தம் தெரிவித்திருக்கிறார் ராகுல். தொடர்ந்து கனிமொழி, ‘திமுகவுடன் இருந்து கொண்டே இன்னொரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதாக ஒரு தோற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்துவது நியாயமா?’ என கேள்வியை வீச, ராகுல், ‘இனி அதுபோல நடக்காது. இனி அப்படி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என பிராமிஸ் அளித்திருக்கிறார்
ராமதாஸுக்கு ஷாக் கொடுத்த திமுக
மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய எம்பிக்கள் தங்கள் சுய விளம்பரத்துக்காக கூட்டணிக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தி வையுங்கள்’ என்றும் ராகுலிடம் ஸ்ட்ராங்காகவே கனிமொழி சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தொடர்வது உறுதி ஆகிவிட்டது.
அதே நேரத்தில் கூட்டணிக்கு வெளியில் இருந்து உள்ளே கொண்டு வர திட்டமிடப்பட்ட பாமக ராமதாஸ், தேமுதிகவுடனான டீலையும் கிட்டதட்ட பேசி முடித்து விட்டது திமுக. ராமதாஸ் தரப்பை சந்தித்து பேசிய திமுக தரப்பு மாம்பழ சின்னத்தில் வில்லங்கம் இருப்பதைதெரிந்துகொண்டு ‘நீங்கள் மாம்பழ சின்னடத்தோடு வந்தால் உங்களுக்கு 10 தொகுதிகள் தருவோம். சுயேச்சை சின்னம்தான் என்றால் மூன்று தொகுதிகள்தான் என்று சொல்லி இருக்கிறது. இதற்கு ராமதாஸ் தரப்பு ஜெர்க் ஆக, அதுமட்டுமல்ல. நீங்கள் கூட்டணிக்கு வருவதாக இருந்தால் அதை விசிக தலைவர் திருமாவளவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் பேசி பார்த்து விட்டோம். அவர் பிடி கொடுக்கவில்லை. நீங்கள் ஒரு முறை பேசி பாருங்கள் என்று மேலும் ஷாக் கொடுத்திருக்கிறது.
அதன்படியே ஸ்ரீகாந்தியின் மகன்களான சுகந்தன், முகுந்தன் இருவரும் திருமாவிடம் பேசி இருக்கிறார்கள். அதற்கு திருமா ‘கூட்டணிக்கு தலைவர் நான் இல்லை. ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று நழுவி இருக்கிறார். இப்படியான சூழலில் திருமா மனம் மாறிபால் மட்டுமே ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.
விசிக வைத்த டிமாண்ட்
அதேவேளை திருமா விசிகவுக்கு அதிக சீட் கேட்டு டிமான்ட் வைக்கிறார். அதாவது 2001-ல் விசிக முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது கலைஞர் தமிழகத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளும், புதுச்சேரியில் 2 சட்டமன்ற தொகுதிகளும் கொடுத்தார். இப்போது சூழலில் தமிழகத்தில் உங்களால் விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டு ஒதுக்க முடியவில்லை என்றால், கலைஞர் கொடுத்ததைப் போல கொடுங்கள். நாங்கள் இரட்டை இலக்கம் என சொல்லிக் கொள்வோம் என கேட்டிருக்கிறார் திருமா. அதற்கு திமுக தரப்பு, புதுச்சேரி கோரிக்கை பற்றி யோசிக்கிறோம். ஆனால் தமிழகத்தில் ஆறு சீட்டு தான் என சொல்லிவிட்டதாக தெரிகிறது.
அதேபோல திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுகவுக்கு தலா 6சீட்டுகள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எப்போதும் இதுபோன்ற கூட்டணி கட்சிகளுக்கு திமுக தேர்தல் நிதி கொடுப்பது வழக்கம். அதுமட்டுமின்றி இம்முறை சிபிஐ கட்சியின் தமிழகத்தின் தலைமை அலுவலக கட்டிடம் தொடர்பான பிரச்சனையையும் தீர்த்து வைக்க திமுக தலைமை ஓகே சொல்லி இருக்கிறது. அதனால் சிபிஐ கூடுதல் சீட் கேட்கும் மனநிலையில் இல்லை. இதே போன்ற கமிட்மெண்டுகளால் சிபிஎம், மதிமுகவும் திமுகவின் முடிவுக்கு கட்டுப்பட தயாராகவே இருக்கின்றன.
டார்ச் லைட்டுக்கு வந்த சோதனை
மக்கள் நீதி மையத்தை பொருத்தவரை இரண்டாவது முறையாக டார்ச் லைட் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 234 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக சொல்லி தான் தேர்தல் ஆணையத்திடம் அந்த சின்னத்தை வாங்கி இருக்கிறார்கள். கடந்த 2024 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்து போட்டியிடாமல் போன மக்கள் நீதி மய்யம், இதன் பிறகு டார்ச் லைட்டை தக்கவைத்துக் கொள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். ஒருவேளை கூட்டணிக்கு சென்றால் குறைந்தது 12 இடங்களில் நிற்க வேண்டும். அப்போதுதான் சின்னம் நிலைக்கும். இரண்டாவது முறையாகவும் டார்ச் லைட்டில் நிற்காமல் போனால் சின்னம் அவ்வளவுதான். எனவேதான் மக்கள் நீதி மையம் சார்பில் 15 தொகுதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திமுக மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என சொல்லியிருக்கிறது. தவிர மமக, தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இதில் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு சீட்டுக்கு ஓகே சொல்லி இருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு சீட் தரவும், சில ஆதரவு அமைப்புகளை வாரியம் உள்ளிட்ட பதவிகளில் கவனிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவிர மற்ற கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னம் தான். இவையெல்லாம் போக திமுகவுக்கு 159 தொகுதிகளில் நிற்கிறது. கூட்டணி முடிவாவதை பொருத்து இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் ஏற்படலாம்’’ என்கிறார்கள்.
