வீடுதோறும் பொங்கல் கிஃப்ட்.. சொந்தக் காசில் வாரி வழங்கும் திமுக எம்.எல்.ஏ-க்கள்..!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் பொங்கல் கிஃப்டை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளை திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் அவர்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்ட போதும் ‘ரொக்கப் பணம்’ கொடுக்கவில்லை. ஆனால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக ரூ.3000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் அவர்களது தொகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு பொங்கல் கிஃப்டுகளை வழங்கி வருகின்றனர்.
விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா மீண்டும் திமுக தலைமையிடம் சீட் கேட்டு வருகிறார். அவருக்கு இந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற செல்வாக்கு இருப்பதால் அவர் சார்பில் விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு பொங்கல் கிஃப்டாக சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறார்.
அதேபோல, திமுகவின் சீனியர் அமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு பொங்கலுக்கான கிஃப்ட் வழங்கப்பட்டு வருகிறதாம். அதாவது தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு கொடுத்து வருகிறது. அதை வாங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு அக்கடையின் அருகிலேயே ரூ.5000 மதிப்புள்ள ‘கிஃப்ட் பெட்டி’ கொடுக்கப்படுகிறதாம். அந்த பெட்டியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும், தட்டு, குக்கர் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருக்கிறதாம்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அவர்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்களது சொந்தப் பணத்தில் பொங்கல் கிஃப்டை கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ-க்கள் தரப்பால் கொடுக்கப்படும் ‘எலெக்சன் கிஃப்ட்’ என்ற குதூகலத்துடன் வாங்கிச் செல்கிறார்கள் பொது மக்கள். இது ஆரம்பம்தான்... இன்னும் நிறைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
