பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய நிர்வாகிகளை தட்டித்தூக்கிய இபிஎஸ்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!
பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுகவை தலைமை நிலைய செயலாளரும், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான கே.கே. உமாதேவன் மற்றும் கோமல் ஆர்.கே அன்பரசன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
கடந்த 2001-ல் திருப்புத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.வாக உமாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பின் கழக அமைப்புச் செயலாளர் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது.
பின்னர், டிடிவி.தினகரன் அமமுகவை தொடங்கிய போது அதில் இணைந்த உமாதேவன், அக்கட்சியில் மாவட்டச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், மண்டல பொறுப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் உமாதேவன் அக்கட்சியில் இருந்து கடந்த மே மாதம் திடீரென விலகினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் டிடிவி. தினகரன் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகியதா கே.கே.உமாதேவன் கூறியிருந்தார். ஆனால், அதிமுகவில் இணையாமல் சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கே.கே. உமாதேவன் அதிமுகவில் இணைந்தார்.
அதேபோல், அமமுக மாநில இளைஞர் அணிச் செயலாளரும், செய்தித் தொடர்பாளரும். மயிலாடுதுறை - நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பாளருமான கோமல் ஆர்.கே. அன்பரசன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு பாஜக ஐடி விங் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், திலீப் கண்ணன் மற்றும் மேலும் சில முக்கிய நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி அதிமுகவில் இணைந்து வருவது டிடிலி.தினகரனை அதிர்ச்சியடைய செய்துள்ளது.