முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
தமிழிசை சௌந்தரராஜனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசைக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த போதிலும் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்த சூழலில் மக்களவை தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இன்று தனது ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் குடியுரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி அல்லது தென் சென்னை, விருதுநகர், நெல்லை இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது தெரியவரும்.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழிசையின் சொத்து மதிப்பு ரூ.5.4 கோடி என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.5.8 கோடி என்றும் கூறப்படுகிறது.