அவரு சிரிப்பு இன்னும் கண்ணுக்குள்ளே நிக்குது.. அதற்குள் இப்படியா? கடைசியாக எடுத்த போட்டோவுடன் திமுகவினர்..!
பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (37) . இவர் பிரபல புகைப்படக் கலைஞர். ஆனால் சென்னையில் தங்கியிருந்த ஸ்டாலின் ஜேக்கப் க்ளவுட் கிட்சன் நடத்தி வந்தார். What a Karwad என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் எடுத்த பல்வேறு புகைப்படங்கள் வைரலாகி பிரபலமானவர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் ஜேக்கப் அவரது நண்பரான விஷ்ணு என்பருடன் சென்று விட்டு இருசக்கர வாகனதத்தில் வந்து கொண்டிருந்தார்.
மறைமலை நகர் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவரது நண்பரும் உயிரிழந்தனர். புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப்பின் மரணத்திற்கு அவருடன் பணியாற்றிய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;- நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் @stalinjacka இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும் என தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி ஸ்டாலின் ஜேகப் அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை அதற்குள் இத்தகு துயரச் செய்தி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- எப்போதும் சிரித்த முகம் சற்றும் சோர்வில்லாத களப்பணி, சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு என வலம் வந்த அன்புத் தம்பி ஸ்டாலின் ஜேக்கப்பின் அகால மரணம் இந்த இரவைக் கொடுந்துயராக்கி விட்டது என கூறியுள்ளார்.
கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைத்தளங்களில் களமாடிய தம்பி ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. குடும்பத்தினர் சமூகவலைத்தள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல். உன் உழைப்பை என்றும் மறவோம் என உதயநிதி பதிவிட்டுள்ளார்.